வியாபாரி போல் நடித்து போர்வைகளுக்குள் மறைத்து கஞ்சா கடத்தியவர் கைது போலீஸ்காரர்களிடமே விற்க முயன்றபோது சிக்கினார்


வியாபாரி போல் நடித்து போர்வைகளுக்குள் மறைத்து கஞ்சா கடத்தியவர் கைது போலீஸ்காரர்களிடமே விற்க முயன்றபோது சிக்கினார்
x
தினத்தந்தி 9 Feb 2019 10:36 PM GMT (Updated: 9 Feb 2019 10:36 PM GMT)

மதுரை மேலூரில் போர்வைகளுக்குள் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தியவர் போலீஸ்காரர்களிடமே விற்க முயன்றபோது சிக்கினார்.

மேலூர்,

மதுரை மாவட்டம், மேலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருபவர்கள் கோபாலகிருஷ்ணன், திருமுத்து. இவர்கள் நேற்று மேலூர் அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சத்தியபுரம் என்ற இடத்தில் சாலையோரம் புதிய போர்வைகளுடன் வியாபாரிகள் 2 பேர் நிற்பதை பார்த்தனர். இதனையடுத்து அந்த வியாபாரிகளிடம் போர்வை வாங்குவதற்காக போலீஸ்காரர்கள் சென்றனர்.

மேலும் வியாபாரிகளிடம் எந்த ஊர், எத்தனை நாட்களாக இங்கு கடை போட்டு உள்ளீர்கள் என்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் உசிலம்பட்டி அருகே உள்ள கீரிபட்டியை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர். இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அடுக்கி வைக்கப்பட்டிருந்த போர்வைகளில் இருந்து ஒரு போர்வையை போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணன் உருவினார். அப்போது கஞ்சா பொட்டலம் ஒன்று விழுந்தது. இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் 2 பேரும் தப்பியோடினர்.

உடனே போலீஸ்காரர்கள் சுதாரித்து கொண்டு 2 பேரையும் விரட்டினர். அதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பியோடிவிட்டார்.

போர்வைகளுக்குள் 30 பாலிதீன் பைகளில் இருந்த 50 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட வியாபாரியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் உசிலம்பட்டியை அடுத்த கீரிபட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த பாண்டி (வயது 57) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர் ஒடிசா மாநிலம் ராயகடம் என்ற கிராமத்தில் இருந்து சுமார் 55 கிலோ கஞ்சாவை வாங்கி, அவற்றை பேக்கிங் செய்து புதிய போர்வைகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார்.

பின்னர் பாலிதீன் பைகளில் கஞ்சாவை அடைத்து போர்வைக்குள் மறைத்து வைத்து மேலூர் பகுதியில் போர்வை விற்பது போன்று கஞ்சா பொட்டலங்களை கடத்த முயன்றுள்ளார். அப்போது போலீஸ்காரர்களிடம் சிக்கியுள்ளார்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மற்றொரு நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story