பாம்பன் பாலத்தில் விரைவில் ரெயில்கள் இயக்கப்படும் ரெயில்வே அதிகாரி தகவல்
பாம்பன் பாலத்தின் வழியாக விரைவில் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.
ராமேசுவரம்,
மண்டபத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரெயில் பாலமாகும். இந்த பாலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூக்கு பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4–ந்தேதி திடீரென விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பாலத்தின் வழியாக ரெயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கடந்த 2 மாதமாக அனைத்து ரெயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மறுமார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகிறது. பாம்பன் பாலத்தில் நடைபெற்ற சீரமைப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
அதனை தொடர்ந்து பயணிகள் இல்லாமல் ரெயில் பெட்டிகள் மட்டும் பாலத்தின் வழியாக ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்டது. அங்கு ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்து மண்டபத்துக்கு வரப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் ராமேசுவரத்துக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க அனைத்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பணி நிறைவடைந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் ரெயில்கள் இயக்கப்படாதது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று ரெயில்வே ஆணைய பாதுகாப்பு பிரிவு முதன்மை செயல் இயக்குனர் வினோத்குமார் மற்றும் அதிகாரிகள் பாம்பன் ரெயில் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, பாம்பன் தூக்கு பாலத்தில் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. இதுகுறித்து கட்டுமான பொறியாளர்கள் குழுவினரின் ஆய்வு அறிக்கை இதுவரை வரவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அந்த ஆய்வறிக்கை வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். இருப்பினும் உடனடியாக அனைத்து ரெயில்களையும் ராமேசுவரம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.