இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடை செய்யவேண்டும் ஆட்டோ தொழிலாளர்கள் வலியுறுத்தல்
இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடை செய்யவேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதுச்சேரி,
புதுவை ஆட்டோ தொழிலாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை ஆலை வீதியில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்டோ சங்க மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பேசினார்.
ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, செயல் தலைவர் அபிஷேகம் ஆகியோர் எதிர்கால செயல்பாடுகள் தொடர்பாக பேசினார்கள். ஆட்டோ சங்க மாநில துணைத்தலைவர்கள் பாளையத்தான், ரவிச்சந்திரன், சிவசுப்ரமணியன், வாசு, ஜீவா, முருகன், மாநில செயலாளர்கள் பிரகாஷ், ஜான், சதீஷ்குமார், தேவநாதன், சதீஷ், ராஜி உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
*ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தை உருவாக்கி தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை அமலாக்குவதுடன் ஆட்டோ தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ நிதி உதவி, விபத்து இழப்பீடு, குடும்ப பாதுகாப்பு நிதி, வீடற்றவர்களுக்கு இலவச குடியிருப்பு அல்லது மனைப்பட்டா வழங்கவேண்டும்.
*மத்திய அரசு கொண்டு வரும் சாலை போக்குவரத்து மசோதாவால் போக்குவரத்து தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும், உரிமையாளர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே மத்திய அரசு கொண்டுவரும் இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
*தீபாவளிக்கு வழங்கக்கூடிய ஊக்கத்தொகையை இன்றைய விலைவாசிக்கு ஏற்ப ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். அதேபோல் நலச்சங்கத்தின் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு காக்கி சீருடை வழங்கிட வேண்டும்.
*அரசு அனுமதிபெறாமல் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடுவதை தடை செய்யவேண்டும்.
*பெட்ரோலிய பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் உரிமையை திரும்பப்பெற வேண்டும்.
*புதுவை பஸ் நிலைய பகுதியில் உள்ள மேம்பாலத்தினை மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரத்தில் இயங்கக்கூடிய இழுவை படியாக (எஸ்கலேட்டர்) மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
*பெருகிவரும் ஜனத்தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொதுமக்கள் இடையூறு இல்லாமல் செல்லும் வகையில் அரசு அறிவித்த மேம்பால திட்டங்களையும், புறவழிச்சாலை பணிகளையும் விரைவாக செய்து முடிக்கவேண்டும்.
*புதுவை நகரப்பகுதியில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பாக்குமுடையான்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்ததை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.