அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் புயல் நிவாரண பெட்டகங்கள் தீயில் எரிந்து நாசம் போலீசார் விசாரணை
வடுவூர் அருகே, அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள புயல் நிவாரண பெட்டகங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடுவூர்,
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே கருவாக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியின் ஒரு அறையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்குவதற்காக 27 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று அந்த அறையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென நிவாரண பெட்டகங்கள் மீது பற்றியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் அங்கு வைக்கப்பட்டிருந்த 148 நிவாரண பெட்டகங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தாசில்தார் லட்சுமிபிரபா, மன்னார்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோகன், வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் எரிந்து நாசமான நிவாரண பெட்டகங்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என தெரியவந்தது. மின் கசிவு காரணமாக அறையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story