திருச்சி உறையூரில் துணிகரம்: நிதி நிறுவன அதிபர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை


திருச்சி உறையூரில் துணிகரம்: நிதி நிறுவன அதிபர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 10 Feb 2019 11:15 PM GMT (Updated: 10 Feb 2019 7:41 PM GMT)

திருச்சி உறையூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த போதே மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி இருக்கிறார்கள்.

திருச்சி, 

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 2-வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகைய்யன். இவரது மனைவி பிரதீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முருகைய்யன் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள என்.எஸ்.பி. ரோட்டில் ‘அரவிந்த் பைனான்ஸ்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு முருகைய்யன் மற்றும் குடும்பத்தினர் வழக்கம்போல சாப்பிட்டு விட்டு, ஏ.சி. அறையில் படுத்து தூங்கினர். அதிகாலை எழுந்து துறையூர் அருகே புத்தனாம்பட்டில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு, குடும்பத்துடன் சென்று சாமி கும்பிட அவர் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முருகைய்யன் எழுந்து குளிப்பதற்கு தயாரானார். அப்போது இன்னொரு படுக்கை அறையில் உள்ள பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக திருச்சி உறையூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ராமலிங்கநகரில் உள்ள முருகைய்யன் வீட்டிற்கு விரைந்தனர். கொள்ளை நடந்த வீட்டை போலீசார் பார்வையிட்டபோது, வீட்டின் முன்பக்க கிரில்கேட்டில் உள்ள பூட்டு திறக்கப்பட்ட நிலையில் கீழே கிடந்தது. அதுபோல வீட்டின் பின்பக்க வாசல் கதவில் உள்ள பூட்டும் திறக்கப்பட்டு, அருகில் இருந்த கட்டிட சுவரில் வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் கொள்ளையர்கள் ஏற்கனவே திட்டமிட்டு, கள்ளச்சாவி தயாரித்து, 2 கதவுகளின் பூட்டுகளையும் உடைக்காமல் திறந்து வீட்டிற்குள்ளே சென்று கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

பீரோ இருந்த அறைக்கு பக்கத்து அறையில்தான் முருகைய்யன் குடும்பத்துடன் தூங்கி இருக்கிறார். எனவே, முருகைய்யன் பீரோவில் நகை, பணம் வைத்திருப்பதை முன்கூட்டியே அறிந்தவர்கள் தான், இந்த துணிகர கொள்ளையை அரங்கேற்றி இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அத்துடன் வீட்டினுள் அனைவரும் தூங்கி கொண்டிருக்கும் போது, எவ்வித சத்தமும் இல்லாமல் எப்படி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்க முடியும்? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, முருகைய்யன் மீதே போலீசாரின் சந்தேகப்பார்வை திரும்பி உள்ளது.

எனவே, நிதிநிறுவன அதிபர் மற்றும் அவரது மனைவி பிரதீபாவிடம் என்னென்ன நகைகள் பீரோவில் வைத்திருந்தீர்கள் என பட்டியலிட்டு கொடுங்கள் என விவரம் கேட்டு, முருகைய்யனிடமே போலீசார் கிடுக்கிப்படி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வீட்டில் கொள்ளையர்கள் வந்ததற்கான கைரேகை பதிவாகி உள்ளதா? என கண்டறிய தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டன.

மேலும் வீட்டின் எதிரேவும், பக்கத்து வீடுகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் வந்தது பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் உறையூர் ராமலிங்கநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story