தேசிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை - ஓ.பன்னீர்செல்வம் தகவல்


தேசிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை - ஓ.பன்னீர்செல்வம் தகவல்
x
தினத்தந்தி 11 Feb 2019 4:30 AM IST (Updated: 11 Feb 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி, 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா தொடர்பான தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது ‘அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். பலர் திரும்பி வர உள்ளனர்’ என்று தெரிவித்தார்

கூட்டத்தை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும், அ.தி.மு.க.வில் இணைய வேண்டும் என்ற உங்கள் அழைப்பு அனைவருக்கும் பொருந்துமா?

பதில்:- பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி அ.தி.மு.க.வில் வந்து இணைய வேண்டும். கட்சிக்காக பணியாற்ற வேண்டும். உழைக்க வேண்டும். படிப்படியாக முன்னேற வேண்டும். ஒரு தொண்டன் கூட இக்கட்சியில் தலைவர் ஆகலாம். முதல்-அமைச்சர் ஆகலாம். அந்த நிலையை எட்டிப்பிடிப்பதற்கு தேவையான தகுதியை, திறமையை அவர்கள் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கேள்வி:- இந்த அழைப்பு டி.டி.வி.தினகரனுக்கும் பொருந்துமா?

பதில் :- (சிரித்துக் கொண்டே) ஏன் இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறீர்கள்?

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறதே. அதை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக இருக்கிறதா?

பதில்:- உறுதியாக தயாராக இருக்கிறது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அது நாடாளுமன்ற தேர்தல் ஆக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல் ஆக இருந்தாலும் சரி, அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து பூர்வாங்க பணிகளையும் நிறைவாக செய்து இருக்கிறோம்.

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி உறுதியாகி விட்டதா?

பதில்:- தமிழகத்தை பொறுத்தவரை எந்த அரசியல் இயக்கமும் இதுவரை கூட்டணியை முடிவு செய்யவில்லை. அ.தி.மு.க. தரப்பில் தேசிய கட்சியுடனும் பேசிக் கொண்டு இருக்கிறோம். மாநில கட்சிகளுடனும் பேசிக் கொண்டு இருக்கிறோம். நல்ல முடிவு சீக்கிரம் எட்டப்படும்.

கேள்வி:- இடைத்தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகி விட்டதா?

பதில்:- எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வைத்துள்ளோம். உறுதியாக எங்களின் வெற்றியை தக்க வைத்துக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story