மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் லாரி சக்கரத்தில் சிக்கி பலி தந்தை கண் எதிரே பரிதாபம்


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் லாரி சக்கரத்தில் சிக்கி பலி தந்தை கண் எதிரே பரிதாபம்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:45 PM GMT (Updated: 10 Feb 2019 8:52 PM GMT)

முசிறி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் லாரி சக்கரத்தில் சிக்கி இறந்தார். தந்தை கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

முசிறி, 

முசிறி அருகே உள்ள தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் லோகநாதன்(வயது 20). எலக்ட்ரீசியனான இவர், பெருமாளுடன் நேற்று சொந்த வேலையாக முசிறிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். முசிறி - புலிவலம் சாலையில் வடுகப்பட்டி அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதனால் அதில் இருந்து லோகநாதனும், பெருமாளும் தவறி விழுந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியின் பின்புற சக்கரத்தில் லோகநாதன் சிக்கினார். இதில் உடல் நசுங்கி லோகநாதன் பரிதாபமாக இறந்தார். சாலையோரத்தில் விழுந்த பெருமாள் காயமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீசார், லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து லாரி டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த கண்ணனை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் கண் முன்னே மகன் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story