மடத்துக்குளம் அருகே தஞ்சமடைந்துள்ள சின்னதம்பி யானையை பிடிப்பதா? விரட்டுவதா? அரசின் உத்தரவுக்காக வனத்துறையினர் காத்திருப்பு


மடத்துக்குளம் அருகே தஞ்சமடைந்துள்ள சின்னதம்பி யானையை பிடிப்பதா? விரட்டுவதா? அரசின் உத்தரவுக்காக வனத்துறையினர் காத்திருப்பு
x
தினத்தந்தி 10 Feb 2019 10:45 PM GMT (Updated: 10 Feb 2019 10:13 PM GMT)

மடத்துக்குளம் அருகே தஞ்சமடைந்துள்ள சின்னதம்பி யானையை பிடித்து கும்கியாக மாற்றுவதா? அல்லது வனப்பகுதிக்குள் விரட்டுவதா? என்று அரசின் உத்தரவுக்காக வனத்துறையினர் காத்திருக்கிறார்கள்.

மடத்துக்குளம்,

கோவை சின்னத்தடாகம் பகுதியில் இருந்து டாப்சிலிப் பகுதிக்கு காடு கடத்தப்பட்ட சின்னதம்பி என்ற காட்டுயானை மடத்துக்குளம் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தது. அங்கு கிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பகுதி, கணேசபுரம், ஆகிய இடங்களில் தங்கி இருந்த அந்த யானை, தற்போது கடந்த 4 நாட்களாக மடத்துக்குளம் அருகே உள்ள கண்ணாடி புத்தூர் பகுதியில் கரும்பு தோட்டத்தில் தங்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 8 மணியளவில் கரும்பு தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சின்னதம்பி யானை, சுமார் 30 நிமிடங்கள் வெளியே இருந்துவிட்டு, பின்னர் மீண்டும் கரும்பு தோட்டத்திற்குள் சென்று மறைந்து கொண்டது.

பின்னர் மாலையில் 5.30 மணி அளவில் வெளியே வந்த சின்னதம்பி யானை சுமார் ஒரு மணி நேரம் அங்கும் இங்கும் உலாவியபடி இருந்தது. அப்போது அந்த பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் கூட்டத்தை பார்த்தவுடன் சின்னதம்பி யானை சத்தமாக பிளிறியது. தொடர்ந்து 5 முறை அது பிளிறியது.

இதனால் யானையை பார்த்து பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கைதட்டி, ‘விசில்’ அடித்து ஆர்ப்பரித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் இருட்டி விட்டதால் அது கரும்பு தோட்டத்துக்குள் சென்று பதுங்கி கொண்டது. இதனால் வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து இரவு நேரத்திலும் வனத்துறையினர் மற்றும் போலீசார் சின்னதம்பி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வனத்துறையினருக்கு உதவியாக கும்கி யானை ‘கலீம்’, ‘சுயம்பு’ ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளது.

சின்னதம்பி யானையை பிடித்து கும்கியாக மாற்றுவதா? அல்லது வனப்பகுதிக்குள் விரட்டுவதா? என்று அரசின் உத்தரவுக்காக வனத்துறையினர் காத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்று வனத்துறையினர் கூறினார்கள்.

சின்னதம்பி யானை இருக்கும் இடத்திற்கு 200 மீட்டர் தொலைவில், கும்கி யானை ‘கலீம்’ நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் கும்கி யானை ‘மாரியப்பன்’ காட்டு யானையை பார்த்து ஓடியதாக தெரிகிறது. இதனால் அது கோவை டாப்சிலிப் பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதற்கு பதிலாக நேற்று காலை டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி யானை ‘சுயம்பு’ கண்ணாடிப்புத்தூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சின்னதம்பி யானையையும், 2 கும்கி யானைகளையும் பார்க்க தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மடத்துக்குளம் பகுதிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் குடும்பத்தோடு வந்து சென்றனர். குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் வந்து கும்கி யானைகளை அருகில் கண்டு மகிழ்ந்தனர். பொதுமக்கள் வந்த வாகனங்களால் குமரலிங்கம்–மடத்துக்குளம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நேற்று காலை அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story