பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: திருப்பூரில், பெரியாரிய கூட்டமைப்பினருக்கு அடி–உதை கருப்புக்கொடி தீ வைத்து எரிப்பு; ஒருவர் மண்டை உடைப்பு


பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: திருப்பூரில், பெரியாரிய கூட்டமைப்பினருக்கு அடி–உதை கருப்புக்கொடி தீ வைத்து எரிப்பு; ஒருவர் மண்டை உடைப்பு
x
தினத்தந்தி 10 Feb 2019 11:45 PM GMT (Updated: 10 Feb 2019 10:21 PM GMT)

திருப்பூரில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியாரிய கூட்டமைப்பினருக்கு அடி–உதை விழுந்தது. கருப்புக்கொடிக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. ஒருவர் மண்டை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. சார்பில் புதிய பஸ்நிலையம் முன்பு போராட்டம் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில் அங்கு இந்து முன்னணி சார்பில் மோடிக்கு காவிக்கொடி வரவேற்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாக இந்து முன்னணியினர் அறிவித்தனர். இதையடுத்து நேற்று காலை முதலே அங்கு ஏராளமான இந்து முன்னணியினர், பா.ஜனதா கட்சியினர் அங்கு குவிந்தனர். அப்போது அந்த வழியாக ம.தி.மு.க. கொடியுடன் சென்ற 2 வாகனங்களை துரத்தி அடித்தனர்.

சிறிது நேரத்தில் கருப்புக்கொடியுடன் திடீரென அங்கு பெரியாரிய கூட்டமைப்பை சேர்ந்த ஒருவர் வந்தார். அவரை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த இந்து முன்னணியினர், பா.ஜனதாவினர் அந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் அங்கு வந்த 2 பெரியாரிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களையும் இந்து முன்னணியினர் அடித்து, உதைத்தனர்.

அவர்கள் கொண்டு வந்த கருப்புக்கொடியை பறித்து ரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர். இதில் இந்து முன்னணி தொண்டர் ஒருவரின் மண்டையும் உடைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரியாரிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் மீட்டு வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது இந்து முன்னணியினரும், பா.ஜனதா கட்சியினரும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுபோல, குமரன்சிலை முன்பு ம.தி.மு.க.வினர் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் போது ராயபுரம் பகுதியில் வைத்து திராவிடர் கழக தொண்டரான ஆட்டோ டிரைவர் ராமசாமி மீது சில வாலிபர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தாக்குதலுக்குள்ளான ராமசாமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திராவிடர் கழகத்தினரும் ஏராளமானோர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story