சாலை விதிகளை பின்பற்றி ராமநாதபுரத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் டி.ஐ.ஜி. காமினி வேண்டுகோள்
சாலை விதிகளை பின்பற்றி ராமநாதபுரத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என பரமக்குடியில் போலீஸ் டி.ஐ.ஜி. காமினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4–ந்தேதி முதல் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மோட்டார் வாகன போக்குவரத்து துறை, ஆர்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நுகர்வோர் மன்றம், சாலை பாதுகாப்பு படை ஆகியவை சார்பில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் தன்னார்வ ரத்த தான முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி தலைமை தாங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன், அரசு போக்குவரத்து கழக ராமநாதபுரம் கோட்ட மேலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழாவில் ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமிணி பேசியதாவது:– வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்றி தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் வாகனங்களை முறையாக பராமரிப்பதன் மூலம் விபத்துகளை தடுக்கலாம். மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தலைகவசம் அணிந்து செல்வது மூலமும், கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்வது மூலமும் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
சாலை விதிகளை முறையாக கடைபிடித்து ராமநாதபுரம் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும். இதற்கு அனைத்து டிரைவர்களும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் சாலை பாதுகாப்பு படை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் இளைய தலைமுறையினருக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை விளக்க முடியும். சாலை விதிகளை பின்பற்றி டிரைவர்கள் அனைவரும் வெளிமாநில, வெளி மாவட்ட டிரைவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற ரத்த தான முகாமில் பரமக்குடி மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் உள்பட ஆட்டோ, கார் டிரைவர்கள் திரளாக கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். முன்னதாக சாலை பாதுகாப்பு படை மற்றும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் முகாமின் நோக்கம் குறித்து விளக்கம் அளித்தார். வாகன ஓட்டுனர் உரிமத்தின் அவசியம், விதிமுறைகள் குறித்து பரமக்குடி மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம், வாகன விபத்து முதலுதவி குறித்து பரமக்குடி அரசு மருத்துவனை தலைமை மருத்துவர் நாகநாதன், வாகன விபத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக தலைவர் ராஜகோபால் ஆகியோர் கருத்துக்களை வழங்கினர். முடிவில் பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் இருளப்பன் நன்றி கூறினார்.