ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 11 Feb 2019 4:30 AM IST (Updated: 11 Feb 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டியில் அந்தோணியார் ஆலய திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயலை சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகனான மீனவர் ஜேசுராஜ் (வயது 16) தனது நண்பர்கள் சிலருடன் புளியம்பட்டிக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு புளியம்பட்டி பகுதியில் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் சேறும் சகதியும் கிடந்தது.

இந்த நிலையில் ஆலயத்திற்கு மேற்கே உள்ள பகுதிக்கு ஜேசுராஜ் சென்றார். அப்போது அங்கு இரும்பு கம்பியில் மின்விளக்குகள் கட்டப்பட்டு இருந்தன. அந்த இரும்பு கம்பியை அவர் தொட்டதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஜேசுராஜ் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து புளியம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஜேசுராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story