ஒன்றிய செயலாளர் படுகொலை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


ஒன்றிய செயலாளர் படுகொலை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Feb 2019 4:30 AM IST (Updated: 12 Feb 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி திருத்துறைப்பூண்டியில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வரசூன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆவார். இவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் செல்வரசூன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடி முரசு, மாநில துணை செயலாளர் பூமிநாதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story