வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் நகை, பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு


வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் நகை, பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:00 PM GMT (Updated: 11 Feb 2019 7:44 PM GMT)

திருவண்ணாமலை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையத்தை சேர்ந்தவர் ஜானகி (வயது 69). இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகிய 3 பேர் ஜானகியின் வீட்டிற்கு வந்து உங்கள் மகன் ஆறுமுகத்திடம் நாங்கள் ரூ.250 கடன் வாங்கி இருந்தோம். அதை திருப்பி கொடுக்க வந்ததாக கூறி அவரிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர்.

அதற்கு ஜானகி தன்னிடம் சில்லரை இல்லை என்று கூறி அருகில் உள்ள கடையில் மாற்றி கொடுப்பதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது அந்த மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து பீரோவை திறந்து அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடி விட்டனர்.

சிறிது நேரம் கழித்து சில்லரையை மாற்றிக்கொண்டு ஜானகி வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவர்கள் அங்கு இல்லை. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது மகன் ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story