கொத்தமங்கலத்தில் நிறுத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல்: நீதிமன்ற வழிகாட்டுதல்படி வீடியோ பதிவுடன் வேட்பு மனு


கொத்தமங்கலத்தில் நிறுத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல்: நீதிமன்ற வழிகாட்டுதல்படி வீடியோ பதிவுடன் வேட்பு மனு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 8:45 PM GMT)

கொத்தமங்கலத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக நிறுத்தப்பட்ட தேர்தல் நீதிமன்ற வழிகாட்டுதல்படி வீடியோ பதிவுடன் மீண்டும் வேட்பு மனு பெறப்பட்டது.

கீரமங்கலம், 

கடந்த பல மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு போராட்டங்களும் நடத்தப்பட்டன. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய நிர்வாக குழு தேர்தலுக்கான வேட்பு மனு பெறப்பட்ட நிலையில் வேட்பு மனு பரி சீலனை மற்றும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடவும் தேர்தல் நடத்தும் அதிகாரி வராததால் கூட்டுறவு சங்கம் முற்றுகை, மறியல் போராட்டம் நடந்தது.

பின்னர் கூட்டுறவு சங்கத்தேர்தலில் முறைகேடு நடப்பதாக ஒரு அணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதே போல தமிழ்நாடு முழுவதும் பல வழக்குகள் பதிவானதால் சென்னை உயர்நீதிமன்றம் மண்டல வாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி மண்டலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜசூர்யா விசாரணை செய்தார். விசாரணை முடிவில் கொத்தமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தின் தேர்தலை மீட்டும் புதிய வேட்பு மனுக்கள் பெற்று போலீசார் பாதுகாப்புடன் வீடியோ பதிவு செய்து தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் அடிப்படையில் கொத்தமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தின் தேர்தல் பிப்ரவரி 18-ந் தேதி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியாக கூட்டுறவு சங்கங்களின் ஒன்றிய மேற்பார்வையாளர் வினிதா நியமிக்கப்பட்டு நேற்று வீடியோ பதிவுடன் வேட்பு மனுக்கள் பெற்று உடனுக்குடன் ஒப்புகை சீட்டுகளை வழங்கினார். இதில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு அணியினர் 11 பேரும், அதற்கு மாற்று வேட்பாளர்களும், அதே போல அ.தி.மு.க. அணி சார்பில் வேட்பாளர்களும் மாற்று வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும் சிலர் சுயேட்சைகளாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நேற்று பெறப்பட்ட வேட்பு மனுக்களின் பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. நாளை (புதன் கிழமை) வேட்பு மனுக்களை திரும்ப பெறவும், இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது. 18-ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில், 19-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. 23-ந் தேதி வெற்றி பெற்ற வேட்பாளர்களில் இருந்து சங்கத்திற்கான தலைவர், துணைத்தலைவர் தேர்தலும் நடத்தப்பட உள்ளது. பல ஊர்களிலும் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல்களில் பிரச்சினை என்றாலும் கொத்தமங்கலம் தேர்தல் நிறுத்தப்பட்டு மீண்டும் தேர்தல் நடப்பதால் பரபரப்பாக உள்ளது. 

Next Story