அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் மனு


அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 11 Feb 2019 11:15 PM GMT (Updated: 11 Feb 2019 9:53 PM GMT)

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். ஈரோடு முத்தம்பாளையம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

முத்தம்பாளையம் குடியிருப்பு பகுதி 1–ல் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு குப்பை கிடங்கு அமைத்தால் காற்று மற்றும் குடிநீர் மாசுபடுவதோடு ஆஸ்துமா, டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவவும் வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் பணியை கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மொடக்குறிச்சி அருகே உள்ள கஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் கதிரவனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

எங்கள் பகுதியில் சத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமாக 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் இந்த நிலத்தில் நாங்கள் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். தற்போது குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அந்த நிலத்தில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கோவில் நிலத்தை மீட்டு, நாங்கள் தொடர்ந்து அந்த நிலத்தில் விவசாயம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

எங்கள் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் டாஸ்மாக் கடை கட்டும் பணி நடந்து வருகிறது. டாஸ்மாக் கடை கட்டப்பட்டு வரும் இடத்தின் அருகில் உள்ள சாலை வழியாகத்தான் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவ –மாணவிகள் தினமும் சென்று வருகிறார்கள். மேலும் பெண்கள் நடமாட்டமும் அந்த பகுதியில் அதிக அளவில் இருக்கும்.

எனவே அங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் குடிமகன்களால் மாணவ –மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பெரும் தொல்லை ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை கட்டும் பணியை உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

சென்னிமலை களத்துக்காடு பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவர் கொடுத்திருந்த மனுவில், சென்னிமலை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புறவழிச்சாலை அமைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என்.ஆர்.வடிவேல் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

சீன நாட்டை சேர்ந்த பைட் –டான்ஸ் என்ற நிறுவனத்தால் சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள டிக்–டாக் செயலியில் 15 வினாடிகள் தங்களது கருத்தை படம்பிடித்து வெளியிட முடியும். இதனை பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவ –மாணவிகள் பயன்படுத்தி தங்களது நடன அசைவுகளை பதிவிட்டு வருகிறார்கள். இதில் சில சமயங்களில் மாணவிகள் நடனம் ஆபாச முறையில் சித்தரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த செயலியில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததால் இளம் தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர். இந்தோனேசியா மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும், அமெரிக்காவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களும் இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இளம் தலைமுறையினரை காக்கும் வகையில் இந்திய அரசு டிக் –டாக் செயலியை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


Next Story