நல்லூர் பொன்முத்துநகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கூடாது பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


நல்லூர் பொன்முத்துநகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கூடாது பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 10:14 PM GMT)

நல்லூர் பொன்முத்துநகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

அந்த வகையில் பொன்முத்து நகர் குடியிருப்போர் நலசங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பொன்முத்துநகர் குடியிருப்புமனைகள் திருப்பூர் உள்ளூர் திட்ட குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட இந்த குடியிருப்பு பகுதியில் பூங்கா மற்றும் சிறுவர் பள்ளிக்கூடம் ஆகியவற்றிற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கிடங்கு அமைக்கும் திட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல் தெரிகிறது. இதனால் இந்த பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொண்டுவரக்கூடாது என்று கூறி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம். இதனால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொண்டுவராமல் பொதுமக்களுக்கு தேவையான சாக்கடை கால்வாய் வசதிகள், பூங்கா உள்ளிட்டவற்றை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல்லடம் வடமலைபாளையம் கெருடமுத்தூர் அரிஜனகாலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் கிராமத்தில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். நாங்கள் எங்கள் விசே‌ஷ நிகழ்ச்சிகளை அந்த பகுதியில் உள்ள பொது இடத்தில் வைத்து நடத்தி வந்தோம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து தனிநபர் இல்ல கழிவறைகளை கட்டியுள்ளார். இதுமட்டுமின்றி எங்களுக்கு சொந்தமான சுடுகாடு பகுதியையும் தனது சுயலாபத்திற்காக ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதை மீட்டு, மீண்டும் எங்கள் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல அங்குள்ள காற்றாலையின் உயர் மின்னழுத்த கம்பிகள், குடியிருப்பு பகுதி வழியாகவும், அங்குள்ள பள்ளிக்கூட சுற்று சுவருக்கு மேல்பகுதி வழியாகவும் செல்கிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், அந்த தனிநபர் எங்களை தொடர்ந்து மிரட்டியும் வருகிறார். இதனால் பள்ளிகட்டிடத்தின் மீது செல்லும் உயர்மின்னழுத்த கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய தெய்வா சிட்டி டிரஸ்ட் என்ற அமைப்பினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நாங்கள் அனுப்பர்பாளையம் பகுதியில் கடந்த 2000–ம் ஆண்டு முதல் 18 ஆண்டுகளாக சமூக நல அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறோம். நாங்கள் மனநலம் பாதித்த உறவுகளால் கைவிடப்பட்டு சாலையோரங்களில் தஞ்சம் அடையும் நபர்களை மீட்டு அவர்களை பராமரித்து காப்பகங்களில் சேர்த்து வருகிறோம். சிறுவர், முதியோர் காப்பகங்களில் உள்ளவர்களையும் பரமரித்து தேவையான பொருட்களையும் வழங்கி வருகிறோம். இந்த நிலையில் அவினாசி போத்தபாளையம் பகுதியில் உறவுகளால் கைவிடப்பட்டவர்களை பராமரிக்க என்று ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளோம். இதில் மனநலம் பாதித்தவர்களுக்கான கட்டிடத்தை கட்ட உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியபுத்தூர் மீராங்கண்ணி தோட்டத்திற்கு அருகில் உள்ள விவசாயிகளுக்கு வழித்தடம் இல்லாமல் இருந்து வருகிறது. ஏற்கனவே நொய்யல் கரையோரத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒருவர் தனது சுயலாபத்திற்காக அந்த வழித்தடத்தை அடைத்து வைத்துள்ளார். நொய்யல் கரையோரத்தை நாங்களே சுத்தம் செய்து, எங்கள் சொந்த செலவில் வழித்தடம் அமைத்து கொள்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story