பாம்பனில் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் மார்ச் மாதம் தொடங்கும் முதன்மை திட்ட மேலாளர் தகவல்
பாம்பனில் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் மார்ச் மாதம் தொடங்கும் என்று முதன்மை திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 100 ஆண்டுகளை கடந்துள்ள பாம்பன் ரெயில் பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4–ந் தேதி விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதி உடனடியாக சீரமைக்கப்பட்டாலும் அதன் பின்பு தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து பணிகள் நிறைவடைந்து உள்ளன. ஆனால் இதுவரை பாம்பன் ரெயில் பாலம் வழியாக ராமேசுவரத்திற்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட வில்லை.
மேலும் பாம்பன் ரெயில் பாலம் அருகிலேயே புதிய ரெயில் பாலம் கட்ட அனுமதி வழங்கியது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் புதிய ரெயில் பாலத்தின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதுபோல் தற்போது உள்ள பாம்பன் ரெயில் பாலம் அருகிலேயே வடக்கு பகுதியில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்காக மண் ஆய்வு பணியானது கடந்த 2 வாரத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பாம்பன் கடல் பகுதியில் புதிய ரெயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ள இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக நேற்று பாம்பன் பகுதிக்கு ரெயில்வே துறையோடு சேர்ந்த ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட மேலாளர் பி.கே.ரெட்டி வருகை தந்தார். படகு மூலம் வருகை தந்த அவர் பாம்பன் தெற்கு கடற்கரையில் இருந்து மீன்பிடி படகு மூலம் தற்போது உள்ள ரெயில் பாலம் அருகே புதிய பாலம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியை முழுமையாக ஆய்வு செய்தார். மண் ஆய்வு பணியையும் பார்வையிட்டார்.
அதன்பின்னர் முதன்மை திட்ட மேலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:–
பாம்பன் கடல் பகுதியில் தற்போதுள்ள ரெயில் பாலத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்தில் புதிய ரெயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுஉள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.200 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. திட்ட மதிப்பீட்டு தொகை இதை விட அதிகமாகலாம். புதிய ரெயில் பாலத்தின் பணிகளுக்காக வருகிற மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆர்.வி.என்.எல்.மேற்பார்வையில் பார்வையில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட உள்ளது. புதிய ரெயில் பாலம் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது உள்ள ரெயில் பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் உயரத்திலும் நவீன தொழில்நுட்பத்தில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட உள்ளது. பாலத்தின் மையப்பகுதியில் ஒரே இணைப்பில் மின்மோட்டார் மூலம் மேல்நோக்கி திறந்து மூடும் வகையில் தூக்குப்பாலம் கட்டப்படஉள்ளது.
புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் வரையிலும் தற்போதுள்ள ரெயில் பாலம் வழியாக ராமேசுவரத்திற்கு வழக்கம்போல் ரெயில் போக்குவரத்து நடைபெறும். தற்போது ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது பற்றி தெரியாது. புதிய ரெயில் பாலம் ஆய்வுக்காகவே வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது உடன் அதிகாரி அன்பழகன், என்ஜினீயர் திவாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.