விருதுநகர் மெயின் பஜார் வழியாக பஸ்கள் இயக்க எதிர்ப்பு


விருதுநகர் மெயின் பஜார் வழியாக பஸ்கள் இயக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 Feb 2019 11:15 PM GMT (Updated: 11 Feb 2019 10:58 PM GMT)

விருதுநகரில் மெயின்பஜார் வழியாக பஸ்கள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விருதுநகர்,

விருதுநகரில் பொதுமக்கள் அதிக நடமாட்டமுள்ள மெயின் பஜார் வழியாக சில தினங்களாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இதுதொடர்பாக கலெக்டரிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தின்போது விருதுநகர் இந்துநாடார் வணிகர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 9-ந்தேதி முதல் விருதுநகர் மெயின்பஜார் வழியாக பஸ்கள் அனைத்தும் இயக்கப்படுவதால் பஜாருக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை காலை 8 மணி வரைக்கும் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரையும் லாரிகளில் கொண்டு வந்து ஏற்றவும் இறக்கவும் செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி பஸ்போக்குவரத்தை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் மணிமாறன் தலைமையில் அந்த கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகரில் மார்ச் 17-ந் தேதிமுதல் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்களுக்கு வசதியாக ராமமூர்த்தி ரோட்டில் கட்டப்படும் ரெயில்வே மேம்பாலத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு பஸ்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளை மட்டும் ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகரை குப்பையில்லா நகரமாக்கவும் புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகரில் 2 மாதத்திற்கு ஒருமுறை பஸ் வழித்தடங்களை மாற்றுவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் விருதுநகர் மெயின்பஜார் வழியாக பஸ்கள் இயக்கப்படுவதால் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் உண்டாகிறது. எனவேஇதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story