ஜி.பி.எஸ். கருவி மூலம் நில அளவீடு செய்ததில் குளறுபடி, கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகை


ஜி.பி.எஸ். கருவி மூலம் நில அளவீடு செய்ததில் குளறுபடி, கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Feb 2019 4:15 AM IST (Updated: 12 Feb 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

ஜி.பி.எஸ். கருவி மூலம் நில அளவீடு செய்ததில் குளறுபடி இருப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்,

கொடைக்கானல் மலைக்கிராமங்களான வடகரை பாறை, கும்பரையூர், முளையூர், உரிமைக்கானல், பாலமலை, பேத்துப்பாறை, காலனி மேடு உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் இவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று ஜி.பி.எஸ். கருவி (நில அளவீட்டுக்கு பயன்படுத்தும் கருவி) மூலம் மலைவாழ் மக்களின் நிலங்களை அளவீடு செய்தனர். பின்னர் அதன் அடிப்படையில் அவர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த பட்டாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள் ஏற்கனவே அவர்கள் வைத்திருந்த பட்டாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அளவைவிட குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜி.பி.எஸ். கருவி மூலம் அளவீடு செய்ததில் குளறுபடி இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து பழனிமலை பழங்குடியினர் பளியர், புளையர் கூட்டமைப்பு தலைவி லீலாவதி தலைமையில் மலைவாழ் மக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் மலைவாழ் மக்களான நாங்கள் எங்களின் நிலங்களை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது ஜி.பி.எஸ். கருவி மூலம் அளவீடு செய்து வழங்கப்பட்ட பட்டாவில் குளறுபடி உள்ளது.

இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மலைவாழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story