மாவட்ட செய்திகள்

இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மெக்கானிக்கிடம் ரூ.50 ஆயிரம் நூதன மோசடி; பெண் உள்பட 7 பேர் கைது + "||" + Fraud is a mechanic for claiming to pay double 7 people arrested

இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மெக்கானிக்கிடம் ரூ.50 ஆயிரம் நூதன மோசடி; பெண் உள்பட 7 பேர் கைது

இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மெக்கானிக்கிடம் ரூ.50 ஆயிரம் நூதன மோசடி; பெண் உள்பட 7 பேர் கைது
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மெக்கானிக்கிடம் ரூ.50 ஆயிரத்தை நூதன முறையில் மோசடி செய்த பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவருடைய மகன் பிரபாகரன் (வயது 28). மெக்கானிக். இவருக்கு பவானி மேற்குதெருவை சேர்ந்த பழனிசாமி (65) என்பவருடன் ஏற்கனவே பழக்கம் இருந்து வந்தது.

பிரபாகரனிடம் பழனிசாமி, தனக்கு பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை நன்கு தெரியும் என்றும், அவர் பணம் மாற்றும் தொழில் செய்து வருவதாகவும், அவரிடம் பணத்தை கொடுத்தால் அதற்கு மாற்றாக இரட்டிப்பு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் கூறினார். மேலும், அவ்வாறு பணத்தை மாற்றி கொடுத்தால் எளிதாக பணக்காரராக ஆகிவிடலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய பிரபாகரனும் தன்னிடம் ரூ.3 லட்சம் இருப்பதாக கூறி உள்ளார்.

நேற்று முன்தினம் காலையில் பிரபாகரனை பழனிசாமி செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ் என்பவர் தனது வீட்டிற்கு வந்திருப்பதாகவும், பணத்தை கொண்டு வந்து தந்தால் இரட்டிப்பு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார். அதற்கு பிரபாகரன் தன்னிடம் ரூ.50 ஆயிரம் மட்டுமே இருப்பதாக தெரிவித்து உள்ளார். அவர்களும் அந்த பணத்தை ஈரோடு வ.உ.சி. பூங்காவுக்கு கொண்டு வந்து தருமாறும், அதற்குரிய இரட்டிப்பு பணத்தை தந்துவிடுவதாகவும் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதைபோல பிரபாகரனும் பணத்தை எடுத்துக்கொண்டு வ.உ.சி. பூங்காவுக்கு சென்றார்.

அங்கு ஒரு காரில் பெண் உள்பட 4 பேர் உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் பிரபாகரனிடம் ரூ.50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்கள் 500 ரூபாய் நோட்டுகள் உடைய 2 கட்டுகள் இருப்பதாக ஒரு பார்சலை பிரபாகரனிடம் கொடுத்தனர்.

அவரும் அந்த பணத்தை வாங்கி பார்சலை பிரிக்க முயன்றார். அப்போது 3 பேர் நடந்து வந்துகொண்டு இருந்தனர். அவர்களை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் ‘போலீஸ் வருகிறார்கள்... ஓடி தப்பித்துக்கொள்...’ என்று சொல்லிக்கொண்டே காரில் அங்கிருந்து தப்பி சென்றனர். அங்கு வந்த 3 பேரும், ‘‘அவர்களை பிடியுங்கள்...’’ என்று கூறியபடி காருக்கு பின்னால் சிறிது தூரம் ஓடிச்சென்று மறைந்துவிட்டனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தினால் பிரபாகரன் திகைத்து நின்றார். பிறகு அவரிடம் இருந்த பார்சலை திறந்து பார்த்தபோது, அதில் 100 வெள்ளைத்தாள்களின் மேல் பகுதியில் ஒரு 500 ரூபாய் நோட்டை வைத்து கட்டி இருந்தது தெரியவந்தது. மற்றொரு பணக்கட்டும் அதேபோல் வெள்ளைத்தாள்களும் அதற்கு மேல் ஒரு 500 ரூபாய் நோட்டும் இருந்ததை பார்த்து பிரபாகரன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து காரில் வந்த 4 பேரும், போலீஸ் போல் நடித்த 3 பேரும் ஒன்றாக சேர்ந்து தன்னை ஏமாற்றியதை பிரபாகரன் உணர்ந்தார்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பிரபாகரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஈரோடு மாமரத்துப்பாளையம் சத்திரோட்டில் நேற்று முன்தினம் இரவு வீரப்பன்சத்திரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் எருக்கொல்லையனூரை சேர்ந்த நாகராஜ் (40), பவானி மேற்குதெருவை சேர்ந்த பழனிசாமி (65), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் புதுசூரங்குடி ஸ்ரீரங்கபுரத்தை சேர்ந்த தங்கமணி (52), ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை மீனவர் வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் (38), காமராஜர் வீதியை சேர்ந்த சதீஷ் (32), பெங்களூரு புவனேஸ்வரி நகரை சேர்ந்த ராகவேந்திரன் (37), தும்பூர் குந்தூர் குறுக்குதெருவை சேர்ந்த மஞ்சுநாத்தின் மனைவி யசோதா (55) ஆகியோர் என்பதும், இவர்கள் 7 பேரும் சேர்ந்து பிரபாகரனிடம் ரூ.50 ஆயிரத்தை மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து வெள்ளைத்தாள்களுடைய 80 போலி பணக்கட்டுகள், ஒரு கார், ஒரு வாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதில் கைதான நாகராஜ், தங்கமணி ஆகியோர் மீது தர்மபுரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பண மோசடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோட்டில் மெக்கானிக்கிடம் நூதன முறையில் ஒரு கும்பல் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. தாளவாடி அருகே பஸ் வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
தாளவாடி அருகே பஸ் வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
2. தோழி வீட்டில் கள்ளக்காதலனுடன் இருந்த இளம்பெண் கையும் களவுமாக பிடித்து கணவர் போலீசில் ஒப்படைத்ததால் பரபரப்பு
ஆரல்வாய்மொழியில் தோழி வீட்டில் கள்ளக்காதலனுடன் இருந்த இளம்பெண்ணை, கணவரே கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
3. நிலத்தை அளவீடு செய்து கொடுக்க ரூ.65 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது
நிலத்தை அளவீடு செய்து கொடுக்க ரூ.65 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.
4. பெருந்துறை அருகே பரபரப்பு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி வாலிபர் கைது
பெருந்துறை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர் போராட்டம்; கிரண்பெடி- நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை நடத்துவதில் இழுபறி
மக்கள் பிரச்சினைகளுக்காக முதல் அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பெடி நடத்த இருந்த பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்தது. இருவரும் நிபந்தனைகளை விதித்து சந்திக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...