ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ஊர்க்காவல் படை வீரரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வாலிபர் சிக்கினார்


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ஊர்க்காவல் படை வீரரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:45 AM IST (Updated: 13 Feb 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதை தடுக்க முயன்ற ஊர்க்காவல்படை வீரரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற வாலிபர் சிக்கினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஐ.டி.பி.ஐ. வங்கி இயங்கி வருகிறது. அந்த வங்கியின் முன்புறத்தில், வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை அந்த ஏ.டி.எம். மையத்திற்குள் ஒரு வாலிபர் புகுந்து எந்திரத்தை உடைத்தார். அப்போது அந்த வழியாக மொபட்டில் சென்ற 2 பேர், அதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் கூறினர்.

இதையடுத்து போலீசாருடன் பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரரான அரும்பாவூர் அருகே உள்ள அ.மேட்டூர் நந்தனார் தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 35), மொபட்டில் வந்த 2 பேருடன் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அப்போது ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடியையும், ஏ.டி.எம். எந்திரத்தையும் உடைத்து கொண்டிருந்த வாலிபரை, ஊர்க்காவல் படைவீரர் கண்ணன் எச்சரித்தவாறு, அவரை பிடிக்க முயன்றார்.

அப்போது அந்த வாலிபர், கீழே கிடந்த கம்பை எடுத்து கண்ணனை அடிக்க பாய்ந்தார். அதனை தடுத்து, அவரை பிடிக்க முயன்ற கண்ணன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வாலிபர், கண்ணனை சரமாரியாக தாக்கினார். இதில் கண்ணனின் மண்டை உடைந்தது. இதற்கிடையே ரோந்து பணியில் இருந்த போலீசாரும், பொதுமக்களும் அங்கு வந்தனர். இதைக்கண்ட வாலிபர், அங்கிருந்து ஓடினார்.

அவரை போலீசாரும், பொதுமக்களும் விரட்டி சென்றனர். அப்போது ஒரு சுற்றுச்சுவரில் ஏறிக்குதித்து, அந்த வாலிபர் தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். அவர்களிடம் இருந்து அந்த வாலிபரை, போலீசார் மீட்டனர். பின்னர் அந்த வாலிபரையும், ஊர்க்காவல் படை வீரர் கண்ணனையும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கண்ணனுக்கு மண்டையில் 7 தையல் போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் ஏதும் கொள்ளை போகவில்லை என்பது தெரியவந்தது. அதில் இருந்த ரூ.5 லட்சத்து 81 ஆயிரம் தப்பியதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டி அருகே உள்ள இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் தனுஷ் (22) என்பதும், அவர் பெரம்பலூரில் தங்கியிருந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவன காவலாளிகளுக்கு மேற்பார்வையாளராக கடந்த 8 மாதங்களாக பணிபுரிந்து வருவதும், தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story