கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது


கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2019 4:45 AM IST (Updated: 13 Feb 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் பூஜைபுரைவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 70). இவர் கடந்த மாதம் 27-ந் தேதி கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர கடற்கரையில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்கமணி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.

இதேபோல் வெங்கடாசலபதி கோவிலை சுற்றி பார்க்க வந்த கொட்டாரம் மிஷின் காம்பவுண்டைச் சேர்ந்த இர்வின் ஜெயக்குமார் மனைவி மேரி நேசபெல் (52) என்பவர் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியையும் மர்மநபர் பறித்துச் சென்றார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று மதியம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஒரு பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற 2 பெண்களையும், அவர்களுடன் வந்த ஒரு வாலிபரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் 3 பேரும் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. மேலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லதா (35), சென்னை சைதாப்பேட்டை அண்ணா காலனியை சேர்ந்த வீரவேல் மனைவி பூவிதா (35), கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பாபு (25) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான விவரம் வருமாறு:-

லதா திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது பாபுவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதாவது ஏராளமான நகை, பணத்தை திருடியதும் தெரிய வந்துள்ளது. அதாவது அஞ்சுகிராமம் பகுதியில் 2 இடங்களில் 9 மற்றும் 8 பவுன் நகை பறித்ததும், சுசீந்திரம் பகுதியில் 10 பவுன் நகை பறித்ததும், கொற்றிகோடு பகுதியில் 15 பவுன் நகை பறித்ததும் தெரிய வந்தது.

இதுதவிர மார்த்தாண்டம், இரணியல் பகுதியில் ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் ரூ.2½ லட்சம், மற்றொருவரிடம் ரூ.1½ லட்சம் திருடியது உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 இடங்களில் 3 பேரும் கைவரிசை காட்டியதும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story