தனி நீதிபதி உத்தரவு ரத்து: உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு 4 வாரத்தில் நியமன ஆணை மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு


தனி நீதிபதி உத்தரவு ரத்து: உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு 4 வாரத்தில் நியமன ஆணை மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 4:08 AM IST (Updated: 13 Feb 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

உடற்கல்வி ஆசிரியர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, அதற்கு தேர்வானவர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதுரை,

நெல்லையை சேர்ந்த மலர்விழி உள்பட பலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

கடந்த 26.7.2017 அன்று தமிழகத்தில் காலியாக உள்ள 632 உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான எழுத்துத் தேர்வு மூலம், தேர்வு செய்யப்பட்ட 632 பேரின் பெயர்களை 12.10.2018 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. உடற்கல்வி ஆசிரியர் தேர்விற்கான அறிவிப்பாணையில் கல்வித்தகுதி முறையாக குறிப்பிடப்படவில்லை. எனவே உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி தேர்விற்காக வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பாணை முறையாக வெளியிடப்படவில்லை எனக்கூறி, உடற்கல்வி ஆசிரியர் தேர்வுப்பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் உள்பட பலர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், ‘தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி அடிப்படையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும். இதனை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உடற்கல்வி ஆசிரியர் தேர்வுப்பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்‘ என்று கூறியிருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவர்களின் கல்வித்தகுதியை பரிசீலனை செய்ய குழு அமைத்து உரிய முடிவெடுக்கவும் நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


Next Story