மக்களை தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஹெல்மெட்டை உடைத்து போராட்டம்
கட்டாய ஹெல்மெட் திட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கப்படுவதாக கூறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஹெல்மெட்டை உடைத்து போராட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுவையில் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா அறிவித்தார். அவரது அறிவிப்பு கடந்த 11–ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கட்டாய ஹெல்மெட் திட்டத்தினால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்தநிலையில் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் ஹெல்மெட்டுகளுடன் சட்டசபை வளாகத்துக்கு வந்தனர். அங்கு ஹெல்மெட் கட்டாயம் என்ற பெயரில் பொது மக்களுக்கு பெரிய அளவில் தொந்தரவு கொடுக்கப்படுவதாக கூறி சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டுகளை தரையில் வீசி உடைத்தனர்.
இந்த நூதன போராட்டம் குறித்து சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பெடியும், முதல்–அமைச்சர் நாராயணசாமியும் மலிவு விளம்பரத்துக்காக தங்களது மோதல் போக்கில் மாநில வளர்ச்சியை போட்டிபோட்டு குட்டிச்சுவராக்கிவிட்டார்கள். அவர்களது அதிகாரப்போக்கிற்கு மக்கள் பகடைக்காய்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மக்கள் நலனைப்பற்றி கவலைப்படாமல் முதல்–அமைச்சர் நாராயணசாமி கவர்னரை வசைபாடி வருகிறார்.
கவர்னர் கிரண்பெடியும் தன்னிலை மறந்து அதிகார வெறிபிடித்து பழிவாங்கும் சிந்தனையில் தெருவில் இறங்கி மக்கள் முகம் சுழிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். ஹெல்மெட் போடாமல் மோட்டார்சைக்கிளில் செல்பவர்களை கையை பிடித்து இழுக்கிறார். அதற்காக நாங்கள் ஹெல்மெட் அணிவதற்கு எதிரானவர்கள் அல்ல.
புதுவை நகரப்பகுதி ஹெல்மெட் அணிந்து செல்வதற்கு ஏற்றதாக உள்ளதா? என்பதை முதலில் பார்க்கவேண்டும். நகரில் எங்கும் 20 கிலோ மீட்டார் வேகத்துக்கு மேல் செல்ல முடியாது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில் பேசிய முதல்–அமைச்சர் நாராயணசாமி ஹெல்மெட் குறித்து படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி 2 மாதத்தில் கட்டாய ஹெல்மெட்டை அமல்படுத்தலாம் என்றார்.
ஆனால் அதற்கு அடுத்த நாளே கவர்னர் கிரண்பெடி போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தாவை மிரட்டி முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு எதிர்ப்பான கருத்தை தெரிவிக்க நாளையே ஹெல்மெட் அணியவேண்டும் என்று சொல்ல சொல்கிறார். ஹெல்மெட் இல்லாதவர்கள் அதை வாங்கக்கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. புதுவையில் அல்லி தர்பார் ராஜ்ஜியம் நடக்கிறது. மக்கள் ஆட்சி இல்லையா? இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா?
ஹெல்மெட் அணியக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எந்த சக்தியும் புதுவை மக்களை அடக்குமுறை கொண்டு அடக்க முடியாது. முதல்–அமைச்சரின் கருத்துக்கு நேர்மாறாக ஒரு போலீஸ் டி.ஜி.பி.யால் பேச முடியாது. கவர்னர் கிரண்பெடியின் மிரட்டல்தான் அதற்கு காரணமாக இருக்கக்கூடும்.
ஹெல்மெட் அணியாதவர்களை திருட்டுக்கூட்டத்துடன் ஒப்பிட்டு கவர்னர் கூறுகிறார். அவர்களை மன்னிக்கலாமா? என்று கேட்கிறார். அப்படி பேசும் அளவுக்கு தரம் தாழ்ந்தவர்களா புதுவை மக்கள்? புதுவை சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. விபத்துகளுக்கு அதுதான் முக்கிய காரணம். அதை அகற்ற கவர்னர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் இல்லை. அதை வழங்க கவர்னர் நடவடிக்கை எடுத்தாரா? ஹெல்மெட்டில் காட்டும் அக்கறையை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கவர்னர் காட்டியிருக்கலாமே? யார் அடக்குமுறையில் ஈடுபட்டாலும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்க போலீஸ் டி.ஜி.பி., எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழுவினை அமைக்கவேண்டும். முதல்–அமைச்சரின் கட்டுப்பாட்டில் அவரது துறை அதிகாரிகள் இல்லை. இத்தகைய கேவலமான நிர்வாகம் புதுச்சேரியில் நடக்கிறது.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.