வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கிய 74 கிலோ கஞ்சா பொட்டலங்கள் போலீசார் விசாரணை


வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கிய 74 கிலோ கஞ்சா பொட்டலங்கள் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Feb 2019 11:15 PM GMT (Updated: 13 Feb 2019 7:12 PM GMT)

வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கிய 74 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர். இலங்கைக்கு கடத்த முயன்ற போது இந்த கஞ்சா பொட்டலங்கள் கடலில் விழுந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், விழுந்தமாவடி, வாணவன்மகாதேவி உள்பட பல கடற்கரை கிராமங்கள் உள்ளன. வேதாரண்யம் கடற்கரை பகுதியில் அடிக்கடி ஆட்கள் இல்லாத மர்ம படகுகள் கரை ஒதுங்குவது, கஞ்சா பொட்டலங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் கரை ஒதுங்குவது போன்றவை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு கரை ஒதுங்கும் மர்ம படகுகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது வேதாரண்யம் கடற்கரையில் 74 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கி உள்ளது மீனவர்கள் மற்றும் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு முனைகாடு கடற்கரை பகுதியில் இருந்து ஆறுகாட்டுத்துறை கடற்பகுதி வரை 2 கிலோ எடை கொண்ட 13 கஞ்சா பொட்டலங்களும், பெரியகுத்தகை கடற்கரையில் 2 கிலோ எடைகொண்ட 11 கஞ்சா பொட்டலங்களும், கோடியக்காடு ஆரம்ப பகுதி கடற்கரையில் 2 கிலோ எடை ெ-்காண்ட 13 கஞ்சா பொட்டலங்களும் என மொத்தம் 37 பாக்கெட்டுகளில் 74 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கி கிடந்தன. இந்த கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடற்கரையில் கிடந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த கஞ்சா பொட்டலங்கள் இலங்கைக்கு படகில் கடத்தி செல்ல முயன்ற போது படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து கரை ஒதுங்கியதா?

அல்லது கஞ்சா பொட்டலங்களை படகில் ஏற்ற வந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் கஞ்சா பொட்டலங்களை கடற்கரையில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் வேதாரண்யம் கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story