திருவள்ளூர் அருகே எந்திரகோளாறால் திருவனந்தபுரம் ரெயில் நடுவழியில் நிறுத்தம் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர் அருகே எந்திரகோளாறால் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர்,
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்று காலை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென எஸ்.11 என்ற எண்ணுடைய படுக்கை வசதி கொண்ட பெட்டியில் எந்திர கோளாறு ஏற்பட்டு சத்தம் வந்தது.
இதைத்தொடர்ந்து கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது ரெயில்வே கேட் அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள், பழுதான ரெயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில்வே கேட் மூடப்பட்டதால் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலரும் அவதி அடைந்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பழுதான எந்திரம் சரி செய்யப்பட்டது. இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.
இதன் காரணமாக கடம்பத்தூர் பகுதியில் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடம்பத்தூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.