செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்
செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மிரட்டியதால் தற்கொலை செய்ததாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 22). செங்கல்பட்டு அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராமத்தில் உள்ள ஒரு கடையில் தகராறில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் மீது செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஜெயக்குமாரை சிறையில் அடைத்தனர்.
கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்த ஜெயக்குமார் மீது மீண்டும் போலீசார், 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயக்குமாரின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டின் கதவை பூட்டி விட்டு ஜெயக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. போலீசார் தொடர்ந்து ஜெயக்குமாரை தொந்தரவு செய்ததாகவும், அவரை மிரட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் மாணவரின் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதனையடுத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்கல்பட்டு–சென்னை சாலையில் ஜெயக்குமாரின் உறவினர்கள் 200–க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் கிராமமக்கள் 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு கந்தன் மற்றும் வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.