பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவதால் வைகோ நற்பெயரை இழக்கிறார் வானதி சீனிவாசன் பேட்டி


பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவதால் வைகோ நற்பெயரை இழக்கிறார் வானதி சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 9:32 PM GMT)

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ கருப்பு கொடி காட்டுவதால் தனது நற்பெயரை இழக்கிறார் என்று வானதி சீனிவாசன் கூறினார்.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோட்டில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சித்தோடு கங்காபுரம் டெக்ஸ்வேலியில் நாளை (இன்று) நடைபெறும் பா.ஜனதா கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்ள வருகிறார். அதனால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து அமித்ஷா நெசவாளர்கள் மற்றும் கைத்தறி தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதிலும் அமித்ஷா பங்கேற்கிறார்.

கடந்த 10–ந்தேதி திருப்பூரில் நடந்த பா.ஜனதா கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது திரளான தொண்டர்கள் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினார்கள். இதன்காரணமாக தமிழகத்தில் பா.ஜனதா வலுவான கட்சியாக உருவாகி வருகிறது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது கருப்பு கொடி காட்டினார். குறிப்பாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்தபோதும், திருப்பூருக்கு வந்தபோதும் வைகோ மற்றும் அவரது கட்சியின் தொண்டர்கள் கருப்பு கொடி காட்டினார்கள். இதனால் மக்களிடையே உள்ள வைகோவின் மதிப்பு சரிந்து வருவதோடு, அவர் தனது நற்பெயரையும் இழந்து வருகிறார்.

கஜா புயல் பாதிப்பின் போது மத்திய அரசு நிவாரண உதவிகள் வழங்கவில்லை என்று பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு தேவையான உதவிகளை துரிதகதியில் செய்தது. மேலும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கட்சியினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் முகாம் அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்தனர்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பா.ஜனதா சார்பில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு தேவையான மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டது. மத்திய அரசு எந்தவிதத்திலும் தமிழகத்தை புறக்கணிக்கவில்லை.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

அப்போது அவருடன் முன்னாள் எம்.பி. கார்வேந்தன் இருந்தார்.


Next Story