நிபந்தனைகள் இன்றி விவசாய கடனை ரத்து செய்யக் கோரி பெங்களூருவில் விவசாயிகள் தர்ணா போராட்டம்


நிபந்தனைகள் இன்றி விவசாய கடனை ரத்து செய்யக் கோரி பெங்களூருவில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2019 11:00 PM GMT (Updated: 13 Feb 2019 9:57 PM GMT)

நிபந்தனைகள் இன்றி விவசாய கடனை ரத்து செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூருவில் விவசாயிகள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு, 

நிபந்தனைகள் இன்றி விவசாய கடனை ரத்து செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூருவில் விவசாயிகள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் தர்ணா போராட்டம்

கர்நாடகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடிக்கடி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கதக், சிவமொக்கா, தாவணகெரே உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, அவர்கள் நேற்று ரெயில்கள் மூலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சுதந்திர பூங்காவை வந்தடைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடன்கள் ரத்து

எந்த நிபந்தனைகளும் இன்றி கர்நாடக விவசாயிகளின் கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். ‘பஷல் பீமா’ திட்டத்தில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும். வேலை உறுதி திட்டத்தில் விவசாயிகளுக்கு வேலை வழங்க வேண்டும். மகதாயி, கலசா-பண்டூரி திட்டங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

மகதாயி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தீர்ப்பாயம் கூறியபடி கர்நாடகத்துக்கு தண்ணீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதல் தண்ணீரை பெற மாநில அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் மகதாயி திட்டம் தொடர்பாக எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. இந்த திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விவசாயிக்கு நெஞ்சு வலி

இந்த வேளையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாரப்பா என்ற விவசாயிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் போராட்டக்காரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story