ஆங்கிலேயர் ஆட்சியில்தான் வெளிநாடுகளுக்கு அதிக சிலைகள் கடத்தல் தொல்லியல் துறை இயக்குனர் திடுக்கிடும் தகவல்


ஆங்கிலேயர் ஆட்சியில்தான் வெளிநாடுகளுக்கு அதிக சிலைகள் கடத்தல் தொல்லியல் துறை இயக்குனர் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 15 Feb 2019 4:45 AM IST (Updated: 15 Feb 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கிலேயர்கள் ஆட்சியில்தான் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் சிலைகள் கடத்தப்பட்டன என்று தொல்லியல் துறை இயக்குனர் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிற்பத்துறை சார்பில் கருத்தரங்கம் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் பேசுகையில், “தமிழ்ப்பல்கலைக்கழக சிற்பத்துறைக்கு தமிழக அரசு இந்த ஆண்டு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் மூலம் விரைவில் சிற்பக்கலை பயிற்சி கூடம் தொடங்கப்பட உள்ளது. இதில் சிலைகள் வடிமைப்பு குறித்து பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

கருத்தரங்கில் இந்திய தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் கலந்து கொண்டு பேசிய தாவது:-

இயற்கையை மனிதன் வழிபட்டான். பிற்காலத்தில் உருவ வழிபாடு வந்தது. இதன் பிறகுதான் செப்புத்திருமேனிகள் உருவானது. கோவிலை தேடி மக்கள் சென்று வந்த நிலையில் மக்கள் வாழும் பகுதிக்கே இறைவனை கொண்டு செல்வதற்கு உற்சவ மூர்த்திக்கான தேவை எழுந்த போது செப்புத்திருமேனிகள் உருவாக்கப்பட்டன.

செப்பு சிலையில் செம்பு, துத்தநாகம், தகரம் ஆகியவை பெரும்பான்மையாக இருக்கும். இதை ஐம்பொன்சிலை என கூறுவர். ஆனால் 19-ம் நூற்றாண்டில் தான் சிலைகளில் தங்கம், வெள்ளியை சேர்த்தனர்.

தங்கம், வெள்ளியை விட செம்பில் சிலை செய்வது தான் சிறந்தது என கருதினர். செம்பில் தான் வார்ப்புகள் செய்வதற்கு எளிதாக இருக்கும். செம்பில் செய்யப்பட்ட சிலைகளே அழகான வடிவில் கொண்டுவருவதற்கும், மெருகூட்டுவதற்கும் எளிது என்பதால் அதை நம் முன்னோர்கள் தேர்வு செய்தனர்.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கி.மு.1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செப்பு சிலை கிடைத்தது. தமிழகத்தில் அப்போதே செம்பு பயன்பாடு இருந்தது. வடமாநிலங்களில் கி.மு.800 ஆண்டுகளுக்கு முற்பட்ட உலோகத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை கிடைத்தது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 40 ஆயிரம் கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலிலும் ஒரு செப்புத்திருமேனி இருந்திருக்கும் என்பது அனுமானம். தற்போது சிலைகள் பாதுகாப்பு மையங்களில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் செப்புத்திருமேனிகள் உள்ளன. எனவே மீதமுள்ள சிலைகள் என்ன ஆனது? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

1992-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை 350 சிலைகள் திருட்டுப்போனதாக பதிவு செய்யப்பட்டன. இதில் 18 சிலைகள் மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறையின் பதிவுகள் கூறுகின்றன. தஞ்சையை தொடர்ந்து திருவாரூரில் உள்ள பாதுகாப்பு மையத்தில் சிலைகள் ஆய்வு செய்யப்படுகிறது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் தான் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தப்பட்டன. ஆனால் 1972-ம் ஆண்டுக்குப்பிறகு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க முடிகின்றன. அதற்கு புகைப்பட ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. 1972-ம் ஆண்டுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க முடியவில்லை. என்றாலும், யுனெஸ்கோ வழிகாட்டுதலின்படி இரு நாடுகளுக்கு இடையேயான அமைச்சரவை அளவில் பேச்சுவார்த்தை நடத்தி மீட்கப்படுகிறது. அதற்கும் ஆதாரங்கள் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் சிற்பத்துறை தலைவர் ஷீலா, உதவி பேராசிரியர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story