காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க தாலி, மஞ்சள்-குங்குமத்துடன் காத்திருந்த இந்து மக்கள் கட்சியினர்


காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க தாலி, மஞ்சள்-குங்குமத்துடன் காத்திருந்த இந்து மக்கள் கட்சியினர்
x
தினத்தந்தி 15 Feb 2019 4:30 AM IST (Updated: 15 Feb 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தாலி, மஞ்சள்-குங்குமத்துடன் இந்து மக்கள் கட்சியினர் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்,

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினம் இந்திய கலாசாரத்தை சீரழிப்பதாக கூறி பல்வேறு அமைப்பினர் காதலர் தினத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் இந்து மக்கள் கட்சியினர் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று காதலர் தினத்தையொட்டி காதல் ஜோடிகளுக்கு ‘திடீர்’ திருமணம் செய்து வைக்க இந்து மக்கள் கட்சியினர் முடிவு செய்து இருந்தனர்.

அதன்படி இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் பாலா தலைமையில் 50 பேர் தாலி, மஞ்சள்-குங்குமம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கல பொருட்கள், கல்யாண மாலை, மங்கல வாத்தியக்காரர்களுடன் காதலர்கள் அதிகமாக கூடும் தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.

இந்து மக்கள் கட்சியினர் மங்கல பொருட்கள், தாலியுடன் கோவிலுக்கு செல்வதாக முன்கூட்டியே கிடைத்த தகவலின் அடிப்படையில் கும்பகோணம் தாலுகா போலீசார், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கு புல்வெளியில் அமர்ந்திருந்த காதல் ஜோடிகளிடம் திடீர் திருமணம் குறித்த விவரத்தை கூறி அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தினர்.

போலீசாரின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடிகள், காதலர் தினத்தை கொண்டாட முடியாமல் தப்பித்தோம்... பிழைத்தோம் என மாற்று பாதை வழியாக கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறினர். இதனால் கோவில் வளாகம் காதல் ஜோடிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது. காதலர்களுக்கு திடீர் திருமணம் செய்ய திட்டமிட்டு கோவிலுக்கு வந்த இந்து மக்கள் கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனாலும் கோவிலில் இருந்து வெளியேறாமல் தாலி மற்றும் மங்கல பொருட்களுடன் கோவில் முன்பு காதல் ஜோடிகளுக்காக இந்து மக்கள் கட்சியினர் காத்திருக்க தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் காத்திருந்த அவர்கள், தாங்கள் கொண்டு வந்த மங்கல பொருட்களுடன் கோவிலை 3 முறை வலம் வந்தனர். பின்னர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story