எண்ணூர் முகத்துவாரம் சீரமைப்பு குறித்து கருத்து கேட்பு: பொதுமக்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்


எண்ணூர் முகத்துவாரம் சீரமைப்பு குறித்து கருத்து கேட்பு: பொதுமக்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்
x
தினத்தந்தி 14 Feb 2019 11:00 PM GMT (Updated: 14 Feb 2019 7:12 PM GMT)

எண்ணூர் முகத்துவாரத்தை சீரமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

திருவொற்றியூர், 

எண்ணூரில் ஆறும், கடலும் சேறும் முகத்துவார பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் இறால், நண்டு, மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். முகத்துவார பகுதியில் பல ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ரசாயன கழிவு, வடசென்னை அனல்மின் நிலையத்தின் சுடுநீர் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் இருந்து வரக்கூடிய கழிவுகளால் மாசு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் செத்து மடிகின்றன.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே முகத்துவார பகுதியில் விடப்படும் கழிவு மற்றும் சுடுநீரை தடுக்கவேண்டும் என மீனவர்கள் மற்றும் பொது நல சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து முகத்துவார பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு குறித்து சென்னை நதிநீர் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு சீரமைப்பு நிறுவனம் ஆகியவை சேர்ந்து கடந்த 8 மாதங்களாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி வந்தது.

இந்த ஆய்வின் அடிப்படையில் முகத்துவாரத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று எண்ணூரில் நடைபெற்றது. இதில் துறைமுகம், மாசுக்கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மீனவர் நல சங்கங்கள், பொதுநல அமைப்புகள், கிராம நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

அப்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கழிவுகள் ஆற்றில் கலப்பதாலும், துறைமுகங்களில் உள்ள ஆக்கிரமிப்பாலும் முகத்துவார பகுதி சீரழிந்துவிட்டது. இதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேட்டு கழிவுநீர் கலந்த நீரை பாட்டிலில் பிடித்துவந்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் காண்பித்தனர்.

மேலும் இந்த கருத்து கேட்பு கூட்டம் பற்றி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு வெளியிடவில்லை என்று நிர்வாகிகளும், பொதுமக்களும் சரமாரியாக புகார் தெரிவித்தனர். பொதுமக்களின் சரமாரியான கேள்விகளுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்க முடியாமல் திணறினர்.

அதிகாரிகள் சரியான பதில் அளிக்காததால் பல மீனவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

பின்னர் அதிகாரிகள் கூறும்போது, “பக்கிங்காம் கால்வாயில் மாநகராட்சி சார்பில் பல இடங்களில் கழிவுநீர் விடப்படுவதை ஆய்வில் கண்டறிந்து உள்ளோம். அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முகத்துவார ஆற்றில் மீன்வளம் பாதிக்கப்படுவதை தடுக்க ஆற்றை சீரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து அதன் அடிப்படையில் அரசின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

இதையடுத்து நிருபர்களிடம் அதிகாரிகள் கூறும்போது, “கடந்த 8 மாதமாக முகத்துவார ஆற்றின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தோம். அதில் பக்கிங்காம் கால்வாயில் 9 இடங்களில் மாநகராட்சி கழிவு நீரையும், 5 இடங்களில் குப்பை கழிவுகளையும் போட்டு இருப்பது தெரிந்தது” என்றனர்.

உடனே நிருபர்கள், “அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய் மற்றும் ஆற்றில் கலப்பது இல்லையா?” என்று கேள்வி கேட்டனர். அதற்கு அதிகாரிகள் மழுப்பலாக பதில் கூறியதோடு, தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவசர அவசரமாக கூட்டத்தை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story