சென்னையில் பொதுமக்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் மோசடி 500 பேர் பரபரப்பு புகார்; 7 பேர் கைது
சென்னையில் தனியார் நிதி நிறுவனங்களின் மூலம் கடன் தருவதாக கூறி கோடிக்கணக்கில் சுருட்டிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் பணத்தை இழந்த 500 பேர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பர பரப்பு புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை,
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் பத்மநாபன் பாபு. இவர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து பேசுவதாக மர்மநபர் ஒருவர் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டார். அவர், தொழில் தொடங்குவதற்கு குறைந்த வட்டியில் ரூ.5 லட்சம் வரை எளிமையான முறையில் கடன் தருவோம் என்று குறிப்பிட்டார். அந்த கடனை பெறுவதற்கு என்னுடைய வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் எனது வங்கி ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணையும், ஓ.டி.பி. எண்ணையும் கேட்டார்.
அதை நம்பி, கடன் பெறும் ஆசையில் எனது வங்கி கணக்கில் நான் ரூ.50 ஆயிரம் இருப்பு வைத்தேன். மேலும் எனது ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணையும், ஓ.டி.பி. எண்ணையும் செல்போனில் பேசிய நபரிடம் கொடுத்துவிட்டேன். எனது வங்கி கணக்கில் நான் ரூ.50 ஆயிரம் போடும் வரையிலும் என்னிடம் அந்த மர்மநபர் பேசிக்கொண்டு இருந்தார்.
வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் போட்டதும் அந்த நபர் செல்போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார். அந்த நபர் கூறியபடி, எனக்கு ரூ.5 லட்சம் கடனும் பெற்று தரவில்லை. அதன்பிறகு அந்த நபர் பேசிய செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது செல்போனை எடுத்து பேசவில்லை.
இதனால் நான் உஷாராகி எனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது அதில் இருந்த பணம் ரூ.50 ஆயிரமும் எடுக்கப்பட்டுவிட்டது. ரூ.5 லட்சம் கடன் தருவதாக கூறி செல்போனில் பேசிய மர்ம நபர் என்னிடம் ரூ.50 ஆயிரம் நூதனமான முறையில் மோசடி செய்துவிட்டார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் செந்தில்குமார், கூடுதல் துணை கமிஷனர் சரவணக் குமார் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மீனப்பிரியா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
விசாரணையில் குறிப்பிட்ட நிதி நிறுவனத்தில் சுமார் 70 பெண்கள் உள்பட 125 பேர் வேலை செய்வது தெரியவந்தது. தனி கால்சென்டர் போல அந்த நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த 125 பேரும் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்புகொண்டு குறிப்பிட்ட நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், ரூ.5 லட்சம் உடனடியாக கடன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி, பொதுமக்களை மோசடி வலையில் சிக்க வைத்துள்ளனர்.
ஆனால் இந்த 125 பேருக்கும் பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்ததில் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது. அவர்களுக்கு மேல் நிதி நிறுவனத்தில் அதிகாரிகள் போல் செயல்பட்ட 10 பேர் கொண்ட கும்பல்தான் பணத்தை சுருட்டியதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அவர்களில் 7 பேர் நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு:-
1.வெங்கடேஷ் (வயது 32) சென்னை கொண்டிதோப்பு, 2.விக்னேஷ் (30) திருச்சி, 3.பூபதி (28) பரமத்தி வேலூர், 4.சதீஷ், (28) சென்னை சோழிங்கநல்லூர், 5.சார்லஸ் (27) சென்னை பட்டாளம், 6.திராவிட அரசன் (25) செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம், 7.கிருஷ்ண குமார்(26) சென்னை கோடம்பாக்கம்.
கைதானவர்களில் விக்னேஷ் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். இவரது மாமனார் போலீஸ்காரராக வேலை செய்கிறார். பூபதியும் பி.காம் பட்டதாரி. மற்றவர்கள் பிளஸ்-2 வரை படித்துள்ளனர்.
விசாரணையில் இவர்கள் பல்வேறு நிதி நிறுவனங்களின் பெயரை சொல்லி ரூ.5 லட்சம் கடன் தருவதாக மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த நிதி நிறுவனங்கள் அனைத்தும் போலியானவை ஆகும். இந்த மோசடி கும்பல் சென்னை சூளைமேடு, தேனாம்பேட்டை, வடபழனி, ஆவடி, ஆலந்தூர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் கிளை நிறுவனங்களை நடத்தியும் மோசடி வேலைகளை அரங்கேற்றி உள்ளனர்.
இந்த கிளை நிறுவனங்களில் போலீசார் சோதனை நடத்தி மோசடிக்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற சாதனங்களையும், ஏராளமான செல்போன்களையும், ஏராளமான போலி ஆவணங்களையும் மற்றும் போலியான வங்கி காசோலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்கள் பெயரில் பல்வேறு வங்கிகளில் ஆரம்பிக்கப்பட்ட 45 வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கி வைத்துள்ளனர். குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறித்தான் வியூகம் அமைத்து இந்த மோசடி நடந்துள்ளது.
இதற்கிடையே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இந்த மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த 500 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வழக்கமாக இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் வங்கியிலிருந்து பேசுவதாக செல்போனில் தொடர்பு கொள்வார்கள். ஏ.டி.எம். கார்டுகளை புதுப்பித்து தருவதாக, ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்ணையும், ஓ.டி.பி. எண்ணையும் வாங்கி, குறிப்பிட்ட நபரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்வார்கள்.
ஆனால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த மோசடி கும்பல் புதுமையான முறையில் தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து பேசுவதாகவும், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக இதுபோல் செல்போனில் பேசுபவர்களிடம் பொதுமக்கள் பேசக் கூடாது. இவ்வாறு பேசும்போது, தங்களது வங்கி ஏ.டி.எம்.கார்டின் ரகசிய நம்பரையோ, ஓ.டி.பி. நம்பரையோ சொல்லக்கூடாது. இந்த மோசடி கும்பல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பொதுமக்களிடம் பணத்தை சுருட்டி வந்துள்ளனர். கைதானவர்களின் வங்கி கணக்கில் உள்ள ரூ.30 லட்சம் வரையுள்ள பணத்தை முடக்கி வைத்துள்ளோம்.
இந்த வழக் கில் மூளையாக செயல்பட்ட முக்கியப்புள்ளி ஒருவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிலரையும் தேடி வருகிறோம். மோசடி செய்த கோடிக்கணக்கான பணத்தில், தற்போது முடக்கி வைத்துள்ள ரூ.30 லட்சம் தவிர்த்து மீதி பணத்தை எந்த வழியில் செலவு செய்தார்கள் என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story