தவணை தொகை வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கைது
தவணை தொகை வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய ஒன்றிய பணி மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நல்லம்பள்ளி,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பழைய இண்டூரை சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 38), தொழிலாளி. இவர் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டி வருகிறார். இந்த தொகை 4 தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பச்சியப்பன் 3 தவணைகளில் பணம் பெற்று வீடு கட்டும் பணியை செய்துள்ளார். 4-வது தவணைக்கான ரூ.24 ஆயிரத்தை வழங்குமாறு நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அய்யாவுவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அய்யாவு ரூ.2 ஆயிரம் கொடுத்தால் தான் தவணை தொகையை வழங்க முடியும், என்று கூறி உள்ளார். அதற்கு பச்சியப்பன், தன்னால் அவ்வளவு தொகை வழங்க இயலாது, என்று கூறி உள்ளார். இதன்பின்னர் ரூ.1,500 கொடுக்குமாறு அய்யாவு கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பச்சியப்பன், இதுகுறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.1,500-ஐ பச்சியப்பனிடம் கொடுத்து, பணி மேற்பார்வையாளரிடம் வழங்குமாறு கூறினர்.
அதன்படி பச்சியப்பன், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று அய்யாவுவிடம் ரூ.1,500 கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் கொண்ட குழுவினர் விரைந்து சென்று அய்யாவுவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
லஞ்சம் வாங்கிய ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story