மாஞ்சோலை இரும்பு பாலம் அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும் வனத்துறையினர் தகவல்
மாஞ்சோலை இரும்பு பாலம் அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பை,
மாஞ்சோலை இரும்பு பாலம் அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரப்பாலம்
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து போன்ற பகுதியில் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது அன்றாட தேவைகள், பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வருவர்.
இதில் காக்காச்சிக்கும், நாலுமுக்கு பகுதிக்கும் இடையில் சிற்றாரை கடக்க பழமை வாய்ந்த மரப்பாலம் உள்ளது.
அந்த பாலத்தின் அடிப்பகுதி வலுவிழந்ததால் பாலத்தின் மீது போக்குவரத்திற்கு வனத்துறை தடை விதித்தது. இதனால் பொதுமக்கள் பாலத்தில் நடந்து சென்று, பின்னர் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் வாகனத்தில் ஏறி ஊத்து வரை செல்கின்றனர்.
போக்குவரத்து தடை செய்யப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளதால் அப்பகுதியினர் விரைந்து பாலப்பணிகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
முந்தைய காலங்களில் மரப்பாலம் பழுதானால் தேயிலை தோட்ட நிர்வாகம் பராமரிப்பு பணிகளை செய்யும். தற்போது காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்பாலத்தை வனத்துறை சரி செய்ய உள்ளது.
இரும்பு பாலம்
இந்த மரப்பாலத்தை அகற்றிவிட்டு இரும்பு பாலமாக வனத்துறையினர் அமைக்க உள்ளனர். இதற்கு தேவையான மூலப்பொருட்களான இரும்பு கம்பிகள், வெல்டிங் மிஷின் உள்பட பல்வேறு பொருட்களை பாலம் அமைக்கும் இடத்தில் வனத்துறையினர் சேகரித்து வருகின்றனர். மேலும் பாலம் அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளதாகவும், பாலப்பணிகள் முடியும் வரை வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் பாதுகாப்பு பணியிலும், அவசர தேவைகளுக்காக பொதுமக்களுக்கு உதவி செய்வார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story