மோகனூர் பகுதியில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு


மோகனூர் பகுதியில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Feb 2019 3:30 AM IST (Updated: 16 Feb 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோக திட்டப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலில் மோகனூர் வட்டம் லத்துவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் நல்லையகவுண்டன் புதூர் ரேஷன் கடையினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், பொருட்களின் இருப்பு, விற்பனை, மீத இருப்பு, விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை அதிநவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) இயக்கி அதனடிப்படையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார். இந்த ஆய்வின்போது விற்பனை செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விற்பனை குறித்து விற்பனை முனைய கருவியில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதா? என்றும் சரிபார்த்தார்.

அதனை தொடர்ந்து ஆரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் ஆரியூர் ரேஷன் கடையினையும், மோகனூர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலையின் மூலம் செயல்பட்டு வரும் மோகனூர் ரேஷன் கடையினையும், பேட்டைபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் பேட்டைபாளையம் ரேஷன் கடையிலும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது பொதுமக்களிடம் குடிமைப்பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா?, விற்பனையாளர் சரியாக வருகிறாரா? என்றும் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) இலாஹிஜான், மோகனூர் வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) விஜயகாந்த் உள்பட வழங்கல் துறை அலுவலர்கள் உடன் சென்றனார்.

Next Story