ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்திய தமிழக அதிகாரிகள் விவசாயிகள் முற்றுகை போராட்டம்


ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்திய தமிழக அதிகாரிகள் விவசாயிகள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2019 4:15 AM IST (Updated: 16 Feb 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு லாரிகளை தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்துள்ள போந்தவாக்கம் பகுதியில் விவசாயிகள் 1,000 ஏக்கர் நிலபரப்பில் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலும் அறுவடை செய்த கரும்பை ஆந்திராவில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு விற்று வருகின்றனர். இதற்கு காரணம் ஆந்திர சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி செய்ய பண உதவி செய்வது மட்டுமின்றி அறுவடைக்கு வந்த கரும்பை வெட்ட தொழிலாளர்களை அனுப்பி வைக்கிறது. மேலும் அறுவடை செய்த கரும்பை வயலுக்கே வந்து லாரிகளில் சர்க்கரை ஆலைகளுக்கு ஏற்றி செல்கின்றனர்.

டன் கரும்புக்கு ரூ.2,800 செலுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் திருவள்ளூர் அருகே உள்ள திருவாலங்காட்டில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு விற்றால் பணத்தை பெறுவதற்கு குறைந்தது 2 ஆண்டுகள் ஆகிறது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அறுவடைக்கு வந்த கரும்பை விவசாயிகள் தம் சொந்த செலவில் வெட்டி அனுப்ப வேண்டி உள்ளது. இப்படி திருவாலங்காடு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு விற்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் கோடி கணக்கில் பணம் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணிசெட்டி என்பவர் 2 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு தோட்டத்தில் கடந்த வாரம் திடீர் என்று தீப்பிடித்து கொண்டது. சுற்று வட்டாரங்களில் உள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டு தீயை அணைத்தனர். மீதம் உள்ள கரும்பை திருவாலங்காட்டில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்ப முடிவு செய்து அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். ஆனால் 5 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் அறுவடை செய்ய தொழிலாளர்களை அனுப்பவில்லை. இதனால் வெறுத்து போன சுப்பிரமணிசெட்டியார் ஆந்திராவில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று காலை ஆந்திர தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் அறுவடைக்கு தொழிலாளர்களை அனுப்பியது.

தொழிலாளர்கள் கரும்பை வெட்டி 3 லாரியில் ஏற்றி கொண்டு ஆந்திரா புறப்பட்டனர். இந்த நிலையில் திருவாலங்காட்டில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சாமுண்டீஸ்வரி தலைமையில் அதிகாரிகள் குணசேகரன், அன்புதாசன், கணேசன் ஆகியோர் விரைந்து வந்து போந்தவாக்கம் முக்கிய சாலையில் 3 கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தினர். தமிழக அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை பெற்று கரும்பை சாகுபடி செய்து எப்படி ஆந்திராவில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு விற்பீர்கள் என்று கேட்டவாறு லாரிகளை தடுத்து நிறுத்தினர்.

தகவல் அறிந்ததும் சுப்பிரமணி செட்டி மற்றும் திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பி வைத்து இதுவரை பணம் பெறாத விவசாயிகள் ரவி, பழனி, சந்திரா, செல்வா, எத்திராஜ், கர்ணன், குணசேகரன் என ஏராளமான விவசாயிகள் அங்கு விரைந்து சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திராவில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் போல் சலுகைகளை வழங்கி உடனுக்குடன் பணம் செலுத்தினால் திருவாலங்காடு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்ப தயாராக உள்ளோம். ஆனால் அதுபோன்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால்தான் ஆந்திரவுக்கு கரும்பு அனுப்புவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தடுத்து நிறுத்திய லாரிகளை விடுவிக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் எச்சரித்ததால் லாரிகளை அதிகாரிகள் விடுவித்தனர். பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story