வெவ்வேறு விபத்துகளில் பலியான 2 பேர் உள்பட 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.44¾ லட்சம் நஷ்ட ஈடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு
வெவ்வேறு விபத்துகளில் பலியான 2 பேர் உள்பட 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.44¾ லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த ஏழுப்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ரவி (வயது40). விவசாயி. கடந்த 21-12-2015 அன்று ரவி ஏழுப்பட்டி- குருங்குளம் மெயின்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதனால் அவருடைய கால் துண்டிக்கப்பட்டது.
இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ரவி நஷ்ட ஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து ரூ.21 லட்சத்து 13 ஆயிரத்து 249 வழங்குமாறு தஞ்சை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (58) பெயிண்டர். இவர் கடந்த 14-10-2018 அன்று ஆலங்குடி- புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிவப்பிரகாசத்தை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிவப்பிரகாசத்தின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து ரூ.8 லட்சத்து 86 ஆயிரத்து 816 வழங்குமாறு தனியார் மோட்டார் கம்பெனிக்கு உத்தரவிட்டார்.
திண்டுக்கல் சோலைஹால் சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 28-3-2017 அன்று சக்திவேல் செருப்பு தைத்துக்கொண்டு இருந்த போது அவர் மீது அரசு பஸ் மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திண்டுக்கல் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இறந்த சக்திவேலின் குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்து 500 வழங்குமாறு மதுரை மண்டல அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டார். 3 பேரின் குடும்பங்களுக்கும் ரூ.44 லட்சத்து 87 ஆயிரத்து 565 வழங்குமாறு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story