புஞ்சைபுளியம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை–பணம் திருட்டு
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர் திருடிச்சென்றார்.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன்பாளையம் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி நாகமணி (வயது 48). இவர்களுடைய மகன் தனுசு சரவணன். இவர் கோவையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி கீதா. நாகமணியுடன் தனுசு சரவணனும், கீதாவும் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அவர்கள் 3 பேரும் கோபியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றனர்.
பின்னர் நேற்று மாலை 3 பேரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறி கிடந்தன.
உள்ளே வைக்கப்பட்டு இருந்த 6 பவுன் நகையையும், ரூ.15 ஆயிரத்தையும் காணவில்லை. யாரோ மர்மநபர் வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.