பெருந்துறை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
பெருந்துறை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
பெருந்துறை,
பெருந்துறை அருகே உள்ள சரளையில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்ததும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கலைவாணி, பெருந்துறை உணவு பாதுகாப்பு அதிகாரி மானோகர், ஈரோடு மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கோவிந்தராஜ் மற்றும் ரவி ஆகியோர் நேற்று சரளை கிராமத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டை சோதனையிட்டனர்.
அப்போது அந்த வீட்டில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
ஏற்கனவே பெருந்துறை, விஜயமங்கலம் ஆகிய பகுதிகளில் 2 முறை பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள நிலையில் நேற்று சரளையிலும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.