குடிநீர் தொட்டி வால்வு உடைப்பு: கீழச்சிவல்பட்டியில் வீணாகும் குடிநீர்


குடிநீர் தொட்டி வால்வு உடைப்பு: கீழச்சிவல்பட்டியில் வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 16 Feb 2019 3:40 AM IST (Updated: 16 Feb 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

கீழச்சிவல்பட்டியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் வால்வு உடைந்ததால் குடிநீர் ரோட்டில் பாய்ந்து வீணாகி வருகிறது.

திருப்பத்தூர்,

கீழச்சிவல்பட்டி சந்தைப்பேட்டை அருகே உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் ஊராட்சியின் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமலும், தொட்டியில் உள்ள குழாய்கள் பழுதடைந்தும் காணப்பட்டு வந்தன. இந்தநிலையில் நேற்று குடிநீர் வினியோகத்திற்காக தொட்டியில் நீர் ஏற்றப்பட்டது.

அப்போது தொட்டியில் உள்ள கேட்வால்வு எனப்படும் குழாய் திடீரென உடைந்து அருவி போல் தண்ணீர் கொட்டியது. தொடர்ந்து கவனிப்பின்றி இருந்ததால் தண்ணீர் இளையாத்தங்குடி சாலை மற்றும் வாரச்சந்தைக்குள் புகுந்து வீணாகியது.

நீண்ட நேரம் தண்ணீர் பாய்ந்து வீணாகியதால் மேல்நிலைத் தொட்டி முழுவதும் காலியானது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு கேட்வால்வு மாற்றும் பணி நடைபெற்றது. இந்த பணி தாமதமாக நடந்ததால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகியது. இதுகுறித்து சண்முகம் என்பவர் கூறுகையில், உள்ளாட்சி நிர்வாகம் அமைவதற்கு தாமதம் ஆவதால் இதுபோன்ற தவறுகள் ஏற்படுகிறது.

ஊராட்சி செயலாளர் அனைத்து வார்டு பகுதிகளையும் கண்காணிப்பது கடினம். இதே போல் தெருவிளக்கு மற்றும் சாலைப் பிரச்சினையும் மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கி வருகிறது என்றார். தற்போது அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் கிடைக்கும் நீரும் வீணாகி வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story