ஆதிவராகப்பெருமாள் கோவில் குளத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் நிரப்பும் பணி


ஆதிவராகப்பெருமாள் கோவில் குளத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் நிரப்பும் பணி
x
தினத்தந்தி 15 Feb 2019 9:45 PM GMT (Updated: 15 Feb 2019 10:36 PM GMT)

கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோவில் குளத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது.

கும்பகோணம், 

கும்பகோணம் கும்பேஸ்வரர்கோவில் திருமஞ்சன வீதியில் ஆதிவராகப் பெருமாள் கோவில் உள்ளது. மாசிமக திருவிழாவின்போது காவிரி ஆற்றின் படித்துறையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் வைணவக் கோவில்களில் ஆதிவராகப் பெருமாள் கோவிலும் ஒன்று. இந்த கோவில்

பின்புறத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி குப்பைமேடாக காட்சி அளித்தது. இந்த பகுதியில் ஓடும் கழிவு நீர் அனைத்தும் இந்த குளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசி வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மகாமக விழாவின் போது சமூக பங்களிப்பு திட்டம் ரூ.45 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு சுற்றுச்சுவர் மற்றும் நடைமேடை அமைக்கப்பட்டது. பின்னர் குளத்துக்கு தண்ணீர் விட்டபோது தண்ணீர் குளத்தில் தேங்காமல் உறிஞ்சத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது.

இந்தநிலையில் பங்குனி உத்திரவிழாவையொட்டி கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதையொட்டி குளத்தை மறுசீரமைப்பு செய்ய புதிய குழு அமைக்கப்பட்டது. பின்னர் நீரியல் வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீரை தேக்கி வைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து உபயதாரர்களின் உதவியுடன் சுமார் ரூ.16 லட்சத்தில் கோவில் குளத்தை மறு சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்ப வசதியாக குளத்தில் இருந்த மணல் அகற்றப்பட்டு சுமார் 2 அடி ஆழத்தில் வைக்கோல் மற்றும் களிமண் நிரப்பப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் குளத்தின் அருகே ஆழ்குழாய் கிணறு அமைத்து அதிலிருந்து மோட்டார் பம்பு செட் மூலம் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நேற்று தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிவராகப்பெருமாள் கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து குளத்தின் மறுசீரமைப்பு குழு அமைப்பாளர் செல்வராஜ் கூறியதாவது:-

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குளம் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் குளத்தில் தண்ணீர் தேங்குவதற்கு வசதியாக குளத்திலிருந்த மணலை அகற்றிவிட்டு வைக்கோல் மற்றும் களிமண் ஆகியவற்றை வேறு இடங்களிலிருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கொண்டுவந்து நிரப்பினோம். இதைத்தொடர்ந்து 150 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குளத்திற்கு மின்சார மோட்டார் மூலம் தண்ணீர் விடப்பட்டுவருகிறது. இன்னும் 2 நாட்களில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story