மகன் திருட்டு வழக்கில் சிக்கியதால் அவமானம் தந்தை விஷம் குடித்து தற்கொலை நாசிக்கில் சோகம்
ரூ.15 லட்சம் தங்கம் திருடிய வழக்கில் தனது மகன் கைதானதால் அவமானம் தாங்க முடியாமல் அவனது தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாசிக்,
ரூ.15 லட்சம் தங்கம் திருடிய வழக்கில் தனது மகன் கைதானதால் அவமானம் தாங்க முடியாமல் அவனது தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ரூ.15 லட்சம் தங்க கட்டிகள் திருட்டு
நாசிக் திலக்வாடி பகுதியில் சிவாஜிராவ் பாட்டீல் என்பவரின் பங்களா வீடு உள்ளது. கட்டிட வடிவமைப்பாளரான இவர், காங்கிரஸ் கவுன்சிலர் ஹேமலதா பாட்டீலின் மாமனார் ஆவார்.
இவரது பங்களாவில் ஸ்ரீபத் துக்காராம் பாகூர் என்பவர் வேலை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தந்தைக்கு உதவியாக அவரது மகனான சிறுவனும் வேலை பார்த்து வந்தான்.
இந்தநிலையில் கடந்த மாதம் பங்களாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 5 தங்க கட்டிகள் மற்றும் ரூ.10 ஆயிரம் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவாஜிராவ் பாட்டீல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
4 பேர் கைது
இந்தநிலையில், அங்கிருந்து தங்க கட்டிகள் மற்றும் பணத்தை திருடி சென்றது, ஸ்ரீபத் துக்காராம் பாகரின் மகன் என்பது தெரியவந்தது. பர்பானி மாவட்டத்தில் பதுங்கி இருந்த அவனை போலீசார் கைது செய் தனர். மேலும் திருட்டுக்கு உடந்தையாக இருந்த விட்டல் பகிவால்(34), சிவாஜி குடே(33), விஜய்நாத் பஜன்(18) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் தங்க ஆசாரி என்பது தெரியவந்தது.
சிறுவனிடம் நடத்திய விசாரணையில், அவன் 2 தங்க கட்டிகளை விற்று ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கியதாக தெரிவித்தான். அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 3 தங்க கட்டிகளையும் மீட்டனர். மேலும் 2 தங்க கட்டிகளை விற்றதில் மோட்டார் சைக்கிள் வாங்கியது போக மீதம் இருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தையும் சிறுவனிடம் இருந்து போலீசார் மீட்டனர். இதையடுத்து சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
தந்தை தற்கொலை
திருட்டு வழக்கில் சிறுவன் கைதானதால் அவனது தந்தை ஸ்ரீபத் துக்காராம் பாகூர் அவமானம் அடைந்தார். அவர் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு பத் துக்காராம் பாகூர் பஸ் நிலைய பகுதியில் வைத்து விஷம் குடித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
மகன் திருட்டு வழக்கில் கைதானதால் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story