போதைக்கு அடிமையான மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் அதிகாரி பேச்சு


போதைக்கு அடிமையான மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2019 4:30 AM IST (Updated: 17 Feb 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

போதைக்கு அடிமையான மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று, போதை பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ்பாபு கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக சமூக பணித்துறை இணைந்து போதை பொருட்களால் நிகழும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் போதை பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ்பாபு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

போதை பழக்கங்கள் மாணவர்களை தவறான பாதையில் வழி நடத்தி செல்லும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பாதிப்புகளை உண்டாக்க கூடியது. கண்களில் சுருக்கங்கள் உண்டாகி, தோல் மெலிந்து, கிட்டத்தட்ட சிறு வயதிலேயே வயதான தோற்றம் உண்டாகும். எனவே கல்லூரி காலங்களில் மாணவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் நன்றாக படிக்கும் மாணவர்கள், படிப்பில் கவனம் குறையும்.

போதைக்கு அடிமையாகும் மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். முதல் கட்டமாக கவுன்சிலிங் மூலம் சரி செய்யலாம். இதை தாண்டி போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களை குணப்படுத்த மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. எனவே எதிர்கால நலன் கருதி கல்லூரி காலங்களில் மாணவர்கள் போதை போன்ற தவறான பழக்கங் களுக்கு ஆளாகாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், சமுதாயத்தில் இந்த பழக்கத்தை பரவவிடாமல் தடுப்பது குறித்து குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை தலைவர் சிகாமணி, கல்லூரி முதல்வர் கீதா, மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லாடார்லிங், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு, பல்கலைக்கழக பேராசிரியர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் பிரபு நன்றி கூறினார்.

Next Story