பள்ளி வேன் விபத்து: பலியான மாணவன் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு
பள்ளி வேன் விபத்தில் பலியான மாணவன் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க தேவகோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேவகோட்டை,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளது திருவிடைமருதூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மகன் ஜோஅதிஸ் (வயது 13). இவர் திருவெற்றியூரில் உள்ள ஒரு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கடந்த 20.1.2016 அன்று அந்த பகுதிக்கு வந்த ஒரு பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக் கொண்டிருந்தது.
அப்போது வேனில் பின்புறம் மாணவன் ஜோஅதிஸ் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது மாணவர்களை ஏற்றிய வேன் பின்பக்கமாக இயக்கும் போது, விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மீது எதிர்பாராத நிலையில் மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பலியானான்.
இதையடுத்து மாணவன் ஜோஅதிஸ் குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் வக்கீல் கார்த்திகேயன் மூலம் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி கிருபாகரன் மதுரம், விபத்தில் பலியான மாணவன் குடும்பத்திற்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் இழப்பீடு வழங்க காரைக்குடி நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவிட்டார்.