புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்காய சிகிச்சை மையம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்காய சிகிச்சை மையம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:30 AM IST (Updated: 18 Feb 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக விரைவில் விபத்துக்காய சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் 108 அவசரகால சேவையின் அழைப்பாளர்கள் மற்றும் பயனாளிகளுக்கான பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, தமிழகத்திலேயே முதல் முறையாக 108 அவசரகால சேவையின் அழைப்பாளர்கள் மற்றும் பயனாளிகளுக்கு முதலுதவி பெட்டகம் பரிசாக வழங்கி பேசினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள், 108 ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்தவித பிரதிபலனும் இல்லாமல் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு விபத்து நடந்த இடத்தில் இருந்து அழைத்து உயிரை காப்பாற்றியதற்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களுக்கு இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது. தற்போது 108 ஆம்புலன்சில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. விபத்து நடந்தால் அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு அமெரிக்காவில் 8 நிமிடம் ஆக உள்ளது. தமிழகத்தில் சென்னை நகரில் விபத்து நடந்தால் 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கான நேரம் 8.36 நிமிடமாக தற்போது உள்ளது. இது 3 மாதத்திற்குள் குறைக்கப்பட்டு 8 நிமிடத்திற்குள் செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புதிதாக 100, 108 ஆம்புலன்ஸ்கள் தொடங்கப்பட உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக விரைவில் விபத்துக்காய சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து, தீவிரவாத தாக்குதலில் இறந்த ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து புதுக்கோட்டை காமராஜாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். 

Next Story