ஆவின் மூலம் நாளொன்றுக்கு 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் கலெக்டர் கணேஷ் தகவல்


ஆவின் மூலம் நாளொன்றுக்கு 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் கலெக்டர் கணேஷ் தகவல்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:45 PM GMT (Updated: 17 Feb 2019 8:10 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் மூலம் நாளொன்றுக்கு 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

பால் உற்பத்தியில் இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்திற்கு அடுத்து தமிழகம் பால் உற்பத்தியில் 2-ம் இடம் வகிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை அளிக்கக்கூடிய தொலைநோக்கு குறிக்கோளுடன் பொது மக்கள் நலன் காக்கும் வகையில் பால்வளத்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதே ஆகும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) 1983 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி புதுக்கோட்டை ஆவின் பால் பண்ணையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புத்தாக்கம் செய்யப்பட்ட பால் பண்ணை கடந்த 18.7.2014-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது புதுக்கோட்டை ஆவின் பால் பண்ணை 331 கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நாளொன்றுக்கு 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சராசரியாக 14 ஆயிரத்து 500 லிட்டர் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மீதமுள்ள பால் டேங்கர் லாரிகள் மூலம் நேரடியாக சென்னையில் உள்ள இணையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தமிழக அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கறவை பசுக்கள் மூலம் உற்பத்தியாகும் பால் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 500 லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆவின் ஒன்றியத்தின் பால் உற்பத்தியினை நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டர்களாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை ஆவின் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.6 கோடி பால் பணம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான கால்நடை தீவனம் சங்கங்கள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.4 மானிய விலையில் வழங்கப்பட்டு வருவதுடன், கறவை மாடுகள் எளிதாக சினை பிடிக்க தேவையான தாதுஉப்பு கலவை கிலோ ஒன்றுக்கு ரூ.25 மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகள் நலமுடன் வளர்க்க தேவையான கால்நடை மருத்துவ வசதிகளை சங்கங்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. 2018-19 நிதியாண்டு முதல் பால் உற்பத்தியாளர்களுக்கு கிலோ ரூ.2.50 பைசா வீதம் பசுந்தீவன புல் விநியோகம் செய்யப்படுகிறது. ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையை அதிகப்படுத்தும் வகையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story