மாவட்டம் முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்


மாவட்டம் முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 2019-02-18T23:02:19+05:30)

கடலூர் மாவட்டம் முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர், 

15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய 3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதிய பங்களிப்பின் மீது அரசு விதிகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

அதன்படி கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடலூர் பி.எஸ்.என்.எல். அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் பி.எஸ்.என்.எல். அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர்கள் அலுவலகம் முன்பு நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

ஊழியர் சங்கம் சம்பந்தம், அதிகாரிகள் சங்கம் சிவக்குமார், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக காஷ்மீரில் இறந்த துணை ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய பெரிய அலுவலகத்திலும், நெய்வேலி, வடலூர், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி உள்பட 18 கிளை அலுவலகங்களிலும் ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டு இருந்தது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் 166 அலுவலகங்களில் உள்ள 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க நிர்வாகி சம்பந்தம் தெரிவித்தார். இந்த வேலை நிறுத்த போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடக்கிறது.

Next Story