இடி, மின்னலுடன் பலத்த மழை - 40 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் கவலை


இடி, மின்னலுடன் பலத்த மழை - 40 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 19 Feb 2019 3:45 AM IST (Updated: 18 Feb 2019 11:29 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் 40 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் பகுதியில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. அதன்பிறகு பகலில் வெயிலும், இரவில் கடும் பனிப்பொழிவும் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தது. இதனால் ஏரி, குளங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வேகமாக வற்றியது. பல இடங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகின. மழை பெய்யாதா? என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு, குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் 5 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. அப்போது சூறைக்காற்றும் வீசியது. தொடர்ந்து 6.30 மணி வரை பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. கருகும் நிலையில் கிடந்த பயிர்களுக்கு, இந்த மழை வரப்பிரசாதமாக அமைந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அதே வேளையில் திடீர் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

விருத்தாசலம் பகுதியில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இருப்பினும் ஏரி, குளங்களில் இருந்த தண்ணீரை நம்பியும், நிலத்தடிநீரை நம்பியும் விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல், மூட்டைகளில் கட்டப்பட்டு விற்பனைக்காக விருத்தாசலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைகூடத்திற்கு கொண்டு வருகிறார்கள். அதனை அதிகாரிகள் முன்னிலையில் வியாபாரிகள் ஏலம் முறையில் கொள்முதல் செய்கிறார்கள். கடந்த சில நாட்களாக ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொண்டு வரப்படுகின்றன.

வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு முதல் விவசாயிகள், நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்தனர். விற்பனைக்கூட அலுவலக வளாகத்தில் இருந்த 3 சேமிப்பு கிடங்குகள் இடித்து அகற்றப்பட்டு, புதிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த நெல் மூட்டைகளை திறந்தவெளியில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர்.

இதனிடையே நேற்று காலையில் 1½ மணி நேரம் பெய்த பலத்த மழையால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அடுக்கி வைத்திருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்தன. இதை பார்த்த விவசாயிகளின் கண்களில் கண்ணீர் வந்ததை காணமுடிந்தது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பருவமழையும் போதிய அளவு பெய்யவில்லை, நிலத்தடி நீரும் வறண்டுவிட்டது. இதனால் கடும் தண்ணீர் பற்றாக்குறைக்கு இடையே நாங்கள் மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்து, பாடுபட்டு அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்தோம். ஆனால் இங்கேயும் எங்களை இயற்கை பரிசோதித்து விட்டது. அனைத்து நெல் மூட்டைகளும், மழையில் நனைந்து விட்டது. இனிமேல் இந்த நெல்மூட்டைகளை உலர வைத்தால் தான் விற்பனை செய்ய முடியும். அவ்வாறு உலரவைத்தாலும் உரிய விலை தர மாட்டார்கள். நனைந்த நெல் மூட்டைகளை வியாபாரிகள் உரிய விலைக்கு கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதேபோல் மே.மாத்தூர், ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், காட்டுமைலூர், பெலாந்துறை, பேரளையூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் ஸ்ரீமுஷ்ணம் ராமர் கோவில் அருகில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் அந்தந்த பகுதிகளில் தொடங்கப்பட்டிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story