விடுதியில் அடைத்து வைத்து 4 நாட்களாக சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது


விடுதியில் அடைத்து வைத்து 4 நாட்களாக சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2019 11:15 PM GMT (Updated: 18 Feb 2019 7:02 PM GMT)

வேளாங்கண்ணியில் விடுதியில் அடைத்து வைத்து 4 நாட்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை அருகே வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் 15 வயது சிறுமியின் பெற்றோர், தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன சிறுமி தன்னை வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சிறுமியின் பெற்றோர் வேளாங்கண்ணிக்கு சென்று விடுதியில் அடைத்து வைத்திருந்த சிறுமியை மீட்டனர்.

பின்னர் இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து சிறுமியை பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நாகை பழைய நம்பியார் நகர் அம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் விஜய் என்கிற நீலகண்டன் (வயது 23), நாகூர் சம்பாதோட்டம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் மகன் அரவிந்த்(23), சீர்காழி திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் பிரதீப்(23) ஆகியோர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து அந்த அறையில் கடந்த 4 நாட்களாக சிறுமியை அடைத்து வைத்து 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து நீலகண்டன், அரவிந்த், பிரதீப் ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Next Story